Saturday, December 27, 2008

கனவில் வந்த தூக்கம்

எப்போதும் துயிலும்
என் அறையில்தான்
நேற்றும் துயின்றபோது
என் மென்கனவில் வந்தது
நான் எப்போதும் துயிலும் அறை.
என் தூக்கம் கனவா, நிஜமா?
குழப்பம் தெளியாது
தூங்க முயற்சித்தேன்
இன்னும் கொஞ்சம்.


(C) karthikaneya@gmail.com

பகல்நிலவு

நிலவைப் போல்
நிலவைப் போல்
நடிக்க முயன்று
தோற்கிறது
மழை நாள் சூரியன்.


(C) karthikaneya@gmail.com

Saturday, December 20, 2008

மலையின் அழைப்பு

அதிகாலை வெயிலில்
இளமஞ்சள் பூசிநிற்கும் மலை
அழகாய் எனை மயக்கி
அழைக்கும்.
எழிலான பாதைகளை
ஒயிலான வளைவுகளை
இருபுறமும் ஓடைகளை
இளைப்பாற சோலைகளை
எனை நோக்கி வீசி
எப்போதும் அழைக்கும்.
அகல விரிந்த தோள்களில்
முகில்கள் துஞ்சும் மடியினில்
வெயிலில் ஜொலிக்கும் கணப்பினில்
சாரல் கொஞ்சும் நாட்களில்
அப்பாவை, அம்மாவை,
சகோதரர், தோழர்களை
நினைவூட்டி மயக்கி
எனை அழைத்தவாறு இருக்கும் - மலை
மாலை நெருங்கி
இருள் கவியும் பொழுதுகளில்
விழிகள் கனல
இருட்டில் உலவும்
புலிபோல் தோற்றும்.
பகலெல்லாம் நீள நடந்தும்
ஒவ்வொரு இரவிலும்
தோற்றுப்போய் மீளும்
என் பயணங்களை
வெவ்வேறு விழிகளில்
பார்த்தவாறே உள்ளது
மலைப்புலி.
மலைக்கும் உண்டு
சில விழிகளும்
ஒரே இரவும்.

(C) karthikaneya@gmail.com

வெயில் வாசனை

மேகங்கள் உலர்ந்து கொண்டிருக்கும்
மழைக்குப் பிந்தைய நாளின்
இளங்கதிரில்...
மரக்கிளைகளில் ஊடுருவும்
முதல் கீற்றில் மிதக்கும்
தூசுகளில்...
துவைத்து உலர்த்திய
ஆடைகளின் தூய
நூலிழைகளில்...
மதிய நேர மைதான
விளையாட்டின்பின்
முழங்கால் புழுதியில்...
மாலை நேரத்து
வாயில்களெங்கும்
நீர் தெளிக்கப்படுகையில்...
எழுகின்ற வெயிலின் வாசம்
எழுந்து கொண்டிருந்தது
வீட்டு வாசலில்
விழுந்து கிடந்த
காய்ந்த சருகினின்றும்.

(C) karthikaneya@gmail.com

பழுத்த இலைகள்

பன்னீர் மரங்கள் இரண்டு
பழுக்கத் துவங்கிய மாமரமொன்று
எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உண்டு.
பூச்செடிகள் வளர்க்க
அப்பாவின் விருப்பம்.
புதிதாய் ஒரு ரோஜாச் செடி
பதியன் போட்டிருப்பதாய்
குதியாட்டம் போட்டான் தம்பி.
தம்பி ஒருமுறை
அம்மா ஒருமுறை
தண்ணீர் ஊற்றிவர
அப்பா சென்று ஒருமுறை
அன்பை ஊற்றி வருவார்.
மலரும் முன்பே
ரோஜாவின் புராணம்
மணம் வீசத் துவங்கியது
வீடு முழுவதும்.
ஒருநாள் காலை
புழக்கடைப் பக்கம்
புழங்கியபோது கண்டேன்
வளர்ந்து விட்டிருந்த செடியில்
குழந்தையின் சிரிப்பாக
இளஞ்சிவப்பு ரோஜா.
பல நாட்களாய்
என் தோட்டத்தில்
வளர்ந்து வந்த செடியில்
பழுத்த இலைகளும்
உதிர்ந்திருக்கலாம்
பார்த்ததில்லை நான்
அப்போது.

(C) karthikaneya@gmail.com

பாவம் என் தனிமை

வெற்றுத் தரையில்
வெயிலைக் குறிவைத்து
மொட்டை மாடியில்
இறங்கின சில புறாக்கள்.
நான் விசிறிப்போட்ட
நினைவுகளை - அவை
கொத்தத் துவங்கியபோது
குருதி வழிய
விலகிச் சென்றது
என் தனிமை.

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 17, 2008

ஏன் அப்படி?

ஒவ்வொரு முறை
ஊர் திரும்பும்போதும்
வெகு தொலைவு
நகர்ந்திருக்கிறது
எப்போதும்
அங்கேயே இருக்கும்
என் ஊர்.

Wednesday, December 10, 2008

மிகச் சிறிய மாற்றம்

நெடுநாள் கழிந்து
சென்றபோதும்
நேற்றுதான்
பார்த்தது போல்
இருந்தது
எனது ஊர்.
எந்த மாற்றமும் இல்லாமல்
எல்லாரும்
எல்லாமும்.
பறவைகள்
மனிதர்கள்
பாதைகள்
நதி
உதயம்
அஸ்தமனம்.
ஒன்றும் பெரிய மாற்றமில்லை
சாலைகள் கொஞ்சம்
கருத்திருந்தன
மலைகள் கொஞ்சம்
மெலிந்திருந்தன
என்பதைத் தவிர.

(c) karthikaneya@gmail.com

மலர்த்துளிகள்

மலர்கள் அனைத்தையும்
சிந்தச் செய்து
சென்றது மழை.
கொஞ்சமும் கோபமின்றி
மரங்கள் இப்போது
சிந்திக் கொண்டிருக்கின்றன
மழைத் துளிகளை.

Saturday, November 15, 2008

அண்ணன்களாகிவிட்ட அண்ணன்கள்

தோள்களிலே எனைத் தூக்கி
'உப்புமூட்டை' என்றவர்கள்

சலிக்காமல் நாள்தோறும்
பல கதைகள் சொன்னவர்கள்

விளையாட்டில் வலிந்து சேர்த்து
தோற்கடித்துச் சிரித்தவர்கள்

முகம் சிவந்து அழுதபோது
முத்தமிட்டுத் தணித்தவர்கள்

கடற்கரையில் கைப்பிடித்து
அலையாடிக் கழித்தவர்கள்

ஏனென்றே தெரியாமல்
'யானை-பானை' என்றெல்லாம்

செல்லப் பெயரிட்டுச்
சீண்டி ரசித்தவர்கள்

இப்போது இயற்பெயரால் கூட
அழைப்பதில்லை என்னை.

என்ன செய்யக்கூடும்?
அண்ணன்களாகிவிட்டார்கள்
என் அண்ணன்கள்.

Wednesday, November 12, 2008

காரணமல்லாத காரணம்

உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை
'உன்னிடம் நான் விலகிச் செல்ல
ஒரு காரணமும் இல்லை'
என்பதைத் தவிர.

Tuesday, November 11, 2008

கனவில் திரியும் உயிர்

நீ சிந்திச் சென்றிருந்த
ஓரிரு அன்புச் சொற்களை
என் கனவு வெளியெங்கும்
கொத்தித் திரிந்தவாறு
இருக்கிறது உயிர்ப்பறவை இன்னும்.

Saturday, November 08, 2008

உலராத் துளிகள்

கொடிகளில்
காய்ந்துகொண்டிருக்கும்
மழைத் துளிகள்.
உடைகளை
உலர்த்த
காத்துக்கொண்டிருக்கிறேன்.


கோடை விளையாட்டு

வெயிலோடு
கண்ணாமூச்சி ஆடும்
வேப்ப நிழல்.

மழையல்ல, மழை!

எண்ணத் தொலையாத துளிகளில்
எனக்கான கவிதைகளை
ஏந்தி வரும் மழை.
நனைதலின் ஆனந்தத்தில்
நழுவவிட்ட அத்தனை துளிகளின் பின்
நகக்கண் ஓரம் நழுவி விடைபெறும்
ஒரு துளியைத் தக்க வைத்து
எழுதிடுவேன் ஒரு கவிதையேனும்.
என்றாலும் இயலாது
என் மழை அனுபவம் இயம்ப
எத்தனை கவிதைகளாலும்.

Sunday, October 05, 2008

சிறகுகள்

சிறைக்கூரைமேல்
இளைப்பாறுகின்றன
சில புறாக்கள்.

நிலவு ஏமாந்த நேரத்தில்...

வீடுகள்தோறும்
நட்சத்திரங்களை
அழைத்துவந்தது
மின்சாரம் தடைப்பட்ட இரவு.

நானும் நானும்

வெயில் மிதக்கும்
மூங்கில் காடுகளின்
துளைகளுக்குள்
புகுந்து புகுந்து புறப்படும்
ஒற்றைக்குயில் பாடும் ராகம்.
பகல் முழுவதும்
பாடலில் லயித்த சூரியன்
கூடு திரும்பும் வேளையில்
ஒற்றைககுயிலுக்குத் துணை நான்தானோ?
ஒற்றைக்குயிலே நான்தானோ?

Thursday, October 02, 2008

மனம் காட்டும் கண்ணாடி

சூரியத் துணுக்குகள்
மோத மோத
இசையெழுப்பி
நடக்கும் நதி.

நதியின் இசை
நாணலுக்குத் தாலாட்டு.

தாலாட்டில் கலையாது
தவமிருக்கும் நந்தவனம்.

நந்தவனங்கள் வழியே
உனை அடையும் பாதை.

பாதை எங்கும் பார்த்தேன்
பூவிதழ்களில் கண்ணீர்த் துளி.
நீ பாராமல் நடந்தாயாம்.

நடந்து சென்ற உன்
தோள்களின் மேல்
இரு சிறகுகள் இருந்ததாய்
ஒரு தேவதைக் கற்பனை.

கற்பனையின் கதவுகள்
கண்கள் வழி திறக்கின்றன;
பேனாவின் ஊற்றுக்கண்கள் வழி.

எழுதியபின் பார்த்தேன்.
கற்பனையின் பிம்பங்கள்
காகிதக் கண்ணாடியில்.

நான் மனம் பார்க்கும்
கண்ணாடி நீதான்.
என் மனதைக் காட்ட
என்னையே பூசாதே
பாதரசமாய்.

நேரம் சரியாக...

வீட்டின் அறைகள் யாவற்றிலும்
கடிகாரம் இருப்பது பெருமைதான்
நேற்று முன்தினம் வரை.
நேற்று முற்பகலில்
பாத்திரம் ஒன்றை அடுப்பிலேற்றி
பத்து நிமிடத்தில் இறக்கும்
பணி கிட்டியது. (உபயம்: தமக்கை)
சமையலறையில்
சரியான நேரம் பார்த்து விட்டு
கூடத்துக்கு வந்தேன்.
குழம்பிப் போனேன்.
மூன்று நிமிடம்
முன்னே சென்றது
கூடத்துக் கடிகாரம்.
சமையலறை, கூடம் என
மாற்றி மாற்றி மணி பார்த்து,
தலைசுற்றிப் போய்
தாழ்வாரம் வந்து
தாம்புக் கயிற்றில் தொங்கும்
ஊஞ்சலில் சாய்ந்தேன்.
தாழ்வாரத்துத் தலையாட்டும் கடிகாரமோ
தயங்கித் தயங்கித்
தலையசைத்து ஐந்து நிமிடம்
தாமதமாய்ச் சென்றது.
சரியான நேரமெனைச்
சனி போல் பின்தொடர
படுக்கையறைக்குள் சென்றேன்.
பல்லிளித்தவாறே
பத்து நிமிடம் முன்னே
பாய்ந்து சென்றது
கோமாளிக் கடிகாரம்.
சரியான நேரத்தைச்
சரி செய்யும் என் ஆய்வில்
முடிவு கண்டேன்
காய்கறியில் நீர் வற்றித்
தீயும் மணம் வந்தபோது.
'நேரம் சரியாக இப்போது' என்று
சொல்லிமுடிக்கப்படும் நேரம் ஒன்று
இல்லை இல்லை எப்போதும்.

மொட்டைமாடி விளையாட்டு

கொஞ்ச நேரம் உலாவச் செல்கையில்
கோபித்துக் கொண்ட குழந்தை போல்
மௌனித்து இருக்கும்
மரங்களின் இலைகளிலே.
பார்த்திருந்து அலுத்துவிட்டு
படியிறங்கப் போகையிலோ
கொஞ்சித் தோள் தொட்டுக்
கூப்பிட்டு - என்னை
அல்லாடவிடும் இந்தப்
பொல்லாத தென்றல்.

Tuesday, September 23, 2008

பொக்கெட் ஷாப்பில் ...

கண்ணாடிக் கதவில்
முட்டிக் கொண்டிருக்கும்
வண்ணத்துப்பூச்சி.

Sunday, September 14, 2008

காக்கை விடு தூது

கலைந்து போன தலையோடு
காலையிலேயே அவசரமாய் வந்த காகம்
வீட்டு வெளிச் சுவரில் அமர்ந்து
விருந்தினர்கள் வருவார்கள் எனக் கரைந்தது.
வெளியே செல்கிறோம்
நீ போய் நிறுத்திவிடு - என்று சொன்னேன்.
காஃபி தந்து அனுப்பலாம் என நினைக்கையில்
பறந்து சென்று விட்டது - பாவம்,
தூது சொல்ல வந்த காகம்.

மழையின் அலுவல் நேரம்

ஐந்து நிமிடங்கள்
தாமதமாய்க் கிளம்பாததால்
தவறவிட்டேன்
அலுவலக நேரத்தில்
பெய்யத் துவங்கிய மழையை.
[அலுவலக நேரத்துக்கு சரியாகக் கிளம்பி, பேருந்தைத் தவற விட்டவர்கள் என்னை மன்னிப்பார்களாக]

Wednesday, September 03, 2008

என்னைக் குழந்தையாக்கிய கட்டில்

சதுரமும் அன்றி செவ்வகமும் அன்றி
நாற்கரமாய் இருந்தது
நான்கு படுக்கைகள் கொண்ட விடுதி அறை.
இடது சுவரோரமாய் இருந்த
எனது கட்டிலை
எப்படி திருப்பினாலும்
இடைவெளி இருந்தது
சுவருக்கும் கட்டிலுக்கும்.
வேறெப்படியும்
மாற்ற முடியுமா அல்லது
வேறு கட்டிலுக்கு நான்
மாறி விடுவதா என்றெண்ணியவாறே
தூங்கிப் போனேன்.
புரண்டு படுத்தபோது
கட்டில் இடைவெளியில்
கை விழுந்து ஊசலாடியது,
குப்புறப் படுத்துக்கொண்டு
தொட்டிலில் விளையாடிய
குழந்தை நாட்களை நினைவூட்டியது.
பின்
அப்படியே இருக்கட்டும் என
விட்டுவிட்டேன் கட்டிலை.

மழை துவங்கிய அரட்டை

மனம் விட்டுப் பேசியவாறு
மழையில் நனைந்து வந்தோம்.
சாலையோரக் கடைக்காரர்
சற்று நின்று போகச் சொன்னார்.
மடக்கி வைத்திருந்த குடைகளை
மறைத்து வைத்தவாறு
மறுபடி தொடர்ந்தது அரட்டை.
ரயில் கிளம்ப சில நிமிடம் இருக்க
இடைவெளி விட்டது மழை.
ஓடிச் சென்று ஏறிக்கொண்டு
விருப்பமில்லாதது போல்
விரும்பி அமர்ந்து கொண்டோம்
மழை நனைத்த இருக்கைகளில்.
ஒடுங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும்
ஓய்ந்து போன மழையை எண்ணி
ஒன்றும் பேசாமலே இருந்தோம்.
ரயில் நகரத் தொடங்கியபோது
மீண்டும் அரட்டையைத் துவங்கி வைத்தது
அப்போது பெய்யத் துவங்கிய மழை.

விடுதிக் குறிப்பு - 2

என் அறையின்
குறுக்கே விழும்
சாளரத்தின் வழி
சாயும் நிலவொளி
இரவின் நீளத்தை
அளந்து சொல்லும்.

காலைப் பனியில்
கதவருகே பூத்திருக்கும்
தங்க அரளி மலர்கள்
தனிமை ஏக்கம் தரும்.

எதிரே தெரியும்
கட்டடப் பின்புறங்களில்
இளைப்பாறும் புறாக்கள்
எதிர்பாராத போது
தலை திருப்பிப் பார்ப்பது
தோழமை உணர்வு தரும்.

இழப்புகள் பழக்கித்தரும்
எதிர்பாரா நட்பு தரும்
வேதனை மகிழ்ச்சி
விடுதி வாழ்க்கை.

Saturday, August 23, 2008

விடுதிக் குறிப்பு

நான்காம் வேற்றுமைக்குச்
சான்று தரச் செல்லவில்லை.
எழுதுகோல் வாங்கத்தான் சென்றேன்.
என்றாலும்
'வீட்டுக்கு, வீட்டுக்கு' என
எழுதிப் பார்த்தேன்.
விடுதியில் இருக்கிறேன் நான் இப்பொழுது.

எல்லார்க்குமாம் மழை

இருவழிச் சாலையின்
ஒருவழியில் தென்படும்
மழையின் தடயங்கள்.
கிழக்கே மழை பெய்த சேதியைக்
கசிந்து சென்றிருந்தன
மேற்கே செல்லும் பேருந்துகள்.

Saturday, August 02, 2008

ஊடல்

'க்கூ க்கூ' என்றழைத்த குயிலுக்கு
'குக்கு குக்கு குக்கு' என்று
கோபத்தில் பதிலிறுத்தது
பேடைக் குயில்.

ஐந்து மிடறு தண்ணீரின் விலை

சுற்றுலா தலமல்லாத
ஓர் அணைக்கட்டுக்கு
வேனிற்கால முடிவில் சென்றோம்
கல்விச் சுற்றுலா.
வெந்நீரைத் தேக்கி வைத்தது போல்
வெக்கை தந்தது அணைக்கட்டு.
பிள்ளைகள் வந்திருப்பதைக் கண்டு
பின்தொடர்ந்து மலையேறி வந்திருந்தார்
அந்த ஐஸ் கிரீம் விற்பவர்.
சுற்றி அலைந்து ஐஸ் கிரீம் விற்று விட்டு,
சற்று மர நிழலில் இளைப்பாற அமர்ந்தவர்,
"தண்ணீர் இருக்குதா?" என்றார்.
என் சின்ன பாட்டில் தண்ணீரை
ஐந்து மிடற்றில் குடித்து விட்டு,
புன்னகை வழிய வழிய நிரப்பிய
இரண்டு ஐஸ் கிரீம் தந்தார் இலவசமாக.
இரண்டு ஐஸ் கிரீம்களை விட
இனிமையாக இருந்தது
வியர்வையில் நனைந்த அந்த
உ(வ)ப்பான புன்னகை என்று
இப்போது தோன்றுகிறது.
ஐந்து மிடறு தண்ணீரின் விலை
ஆயுட் பரியந்தம் நினைவில் நிற்கும்
அந்தப் புன்னகை.

சிறுமிகள் நிறைந்த என் தெரு

விடுமுறை நாளொன்றில்
தெருவெங்கும் தூறல் போல் இலையுதிர்க்கும்
கீழை வீடுகளின் மரங்களின் உச்சியில்
வெயில் வீசும் நேரத்தில்,
வாசலில் அமர்ந்து - புத்தகம் ஒன்றை
வாசிக்கும் பாவனையில் கவனித்தேன்
சிறுமிகளால் நிறைந்து
களை கட்டும் என் தெருவை.
குட்டி மிதி வண்டி ஓட்டிச் செல்லும் ஒரு சிறுமி,
நெட்டிலிங்க மரத்தருகே கயிறாடும் ஒரு சிறுமி,
முற்றத்தில் கயிற்று ஊஞ்சல் ஆடுகிற ஒருத்தி,
எட்டி நின்று ஆட்டி விட அவள் பின்னே இன்னொருத்தி,
ரிங்கா ரிங்கா ரோசெஸ் ஆடுகிற மூவர்,
சுற்றி நின்று ரசிக்க அங்கு பல நேயர்,
தாயின் கை பற்றித் தத்திச் செல்லும் இங்கொருத்தி,
மாடியில் நின்று கொண்டு பட்டம் விடும் அங்கொருத்தி.
வாசிக்கும் பாவனையில்
கவனிக்கும் போது தோன்றியது
விடுமுறை நாளில் என் தெருவில்
வேறு யாருமே இல்லை சிறுமிகளன்றி.
கவிஞர் யாரேனும்
கடந்து சென்றால் என் தெருவைக்
கவிதையில் பதிவு செய்யக்கூடும்
சிறுமிகளால் நிறைந்திருக்கும் தெரு என்று.
எனது கவலை எல்லாம் ஒன்று தான்,
புத்தகம் வாசிக்கும் சிறுமியாக
பதிவு செய்யப்படலாம்
என் பெயரும் தவறாக என்று தான்.

தீண்டும் இன்பம்

பரந்த வானில் எல்லாத் திசைகளிலும்
கிளைகளாய் விரிந்த மின்னலைப்
பார்த்தேன் விழிகள் விரியப்
பார்த்தவாறே இருந்தேன்.
சாரலில் கைகளை நனைத்தவாறு
பார்த்துக்கொண்டே இருந்த போது
சத்தியமாய் நம்புங்கள்
ஷாக் அடித்தது சாரல் மழை.

இரயிலினுள் மழை.

மழைக்குப் பயந்து
கண்ணாடி ஜன்னலை
அடைத்த பிறகுதான்
அன்னை மடியிலிருந்து திரும்பி
அருகிருந்த என்னைப் பார்த்தான்.
இடமின்றி நின்றவாறு வந்த
எல்லோரையும் பார்த்தான்.
சாமான்களுக்கான மேலிருக்கைகளில்
அமர்ந்து வந்த சிலரை,
எதிர் இருக்கைப் பெண்ணின்
இளஞ் சிவப்பு நிற கைப்பையை,
என் துப்பட்டாவின் பூ வேலைப்பாட்டை,
முன்னும் பின்னும் அசைந்தவாறு படிக்கும்
மூன்றாம் இருக்கை மாணவியை,
அதை, இதை, எதையும் பார்த்தான்.
பார்வையாலும், வார்த்தையாலும்,
ஸ்பரிசத்தாலும், சிரிப்பாலும்
கண நேரத்தில் எல்லோரையும்
கவர்ந்து விட்டான் தனித்தனியே.
இறங்கும் நேரம் நெருங்க
எழுந்து நின்ற தாய் - எனக்கு
பறக்கும் முத்தம் ஒன்று
கொடுக்கச் சொன்னாள்.
கைகளில் நெடு நேரம் சேமித்த முத்தத்தைக்
கையோடே கொண்டு செல்வானோ என நினைத்தபோது
கைகளை விரித்தான்.
காற்றில் கலந்த முத்தம் என்
கன்னத்தைச் சேர்ந்தது.
கம்பார்ட்மெண்டில் எல்லோர்
கன்னங்களையும் தான்.
காற்றில் ஈரப்பதம் கூடி விட - அவன்
இறங்கிச் சென்றபின் பெய்யத் துவங்கியது
இரயிலினுள் மழை.விருப்பமான வேகத் தடை

காலடியே மெல்ல நெருங்கு.
கட்டெறும்புக் கூட்டம் ஒன்று
கடக்குது பார் தெருவை.

Saturday, July 19, 2008

தற்செயல் தரிசனம்

மின்சாரம் மீளும் வரை
ரசிக்கப்பட்டிருந்தது
வீதியில் வீசிய
பௌர்ணமி நிலவு.

Monday, July 14, 2008

குட்டித் தவளை நினைத்தது

அதிகாலை எழுந்து பின்முற்றக் கதவைத்
திறந்த போது பார்த்தேன்.
அரையளவு நிரம்பிய சிவப்பு நிற வாளியில்
அழுக்குப் பச்சை நிறக் குட்டித் தவளை ஒன்று
அசைந்து கொண்டிருந்தது.
அவ்வளவு பெரிய வாளியில்
அது எப்படி விழுந்திருக்கக் கூடும் என்று
எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
எப்படி வெளியேறுவது என்று
நினைத்திருக்கக் கூடும் அக்குட்டித் தவளை
என்னை முறைத்த போது.

வழி நெடுக அம்மா அப்பா

பாதை எங்கிலும்
பயணங்களில் பார்க்கும்
மின்கடத்தும் கோபுரங்கள்
நினைவூட்டும்
குழந்தைகள் வரையும்
அம்மா அப்பா ஓவியங்களை.

Saturday, July 12, 2008

பாதைகள்

வெவ்வேறு காலணித் தடங்களின் கீழே
நசுங்கிக் கொண்டிருக்கும்
வெற்றுக் காலடிச் சுவடுகள்.

Monday, July 07, 2008

மென்பொருள் நிறுவனப் பணியில் சட்டையில் படியும் சன்னமான அழுக்கைத் துவைத்துப் போட அமைந்தவள்

(முன் வேண்டுகோள்: இது எனது நண்பன் ஒருவனுடைய கனவு. அதைக் கொஞ்சம் கவிதை நடையில் கற்பனை கலந்து சொல்லி இருக்கிறேன். எனவே மென்பொருள் நிறுவனப் பணி புரியும் நண்பர்கள் வன்பொருள்களைத் தேட வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்.)

அடிக்கடி அருந்தும் வாழைப்பழ பால்கூழ் நிறத்தில்
ஆளை வசீகரிக்கும் அழகில்
இடை வரை நீண்ட கூந்தலோடு
ஈருடலும் இவனுயிருமாய் வாழும் நினைவோடு
உலக விடயங்கள் பேசும் ஞானத்தோடு
"ஊம்" மட்டும் சொல்லத் தெரிந்தவளாய்
எதையும் சகிக்கும் பொறுமையோடு
ஏனென்று கேள்வி கேட்காதவளாய்
ஐயத்திற்கு அப்பாற்பட்டவளாய்
ஒரு சுபமுகூர்த்த நாளில்
ஓம்படைக் கிளவியினூடே
ஔவை போலும் (அதை மறந்தேனே) கிடைத்தாள்
உனக்கொரு குலப் பெண்.

Sunday, July 06, 2008

நீல நிறக் கனவு

நிலைக் கண்ணாடி பிரதிபலித்த
நீல இரவு விளக்கின் ஒளியைக்
குறுக்கே கடந்த போது என்
நிழலைப் பார்த்தேன்.
பார்த்தவாறே சென்று படுக்கையில் துயின்றேன்.
என் நீல நிறக் கனவில் வந்தன
பல வண்ண நிலாக்கள்.

தீராத மழை

ஜன்னல் கம்பிகள்
செலவழிக்கின்றன
சற்றுமுன் சேமித்த மழையை.

Friday, June 27, 2008

தரப்படும் <=> அன்பு <=> பெறப்படும்

கூறப்பட்ட நன்றிகள்
திருப்பித் தரப்படும்.
அளிக்கப்பட்ட விட்டுத்தரல்கள்
அங்கீகரிக்கப்படும்.
கோரப்பட்ட மன்னிப்புகள்
ஏற்றுக்கொள்ளப்படும்.
அளிக்கப்பட்ட மன்னிப்புகள்
மதிக்கப்படும்.
காயப்பட்ட மனங்கள்
நேசிக்கப்படும்.
சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகள்
புரிந்துகொள்ளப்படும்.

Tuesday, June 24, 2008

மழை நாளில் உலா வந்த காற்று

மழை இரயிலேறிச் சென்றபின்
உலர்ந்து கொண்டிருந்தது
கல் இருக்கைகளில்
உலாத்தியவாறு காற்று.

மீண்டும் வரும் கோடை

கோடைகால இரயில்கள் எல்லாம்
குழந்தைகள் சிறப்பு இரயில்களாய்த் தோன்றும்.
விடுமுறை முடிந்தபின் இரயில்கள்
வெறிச்சோடிப் போய்விடுகின்றன
கல்லூரி மாணவர்களின்
கலகலப்பு மிச்சமிருந்தும்.

முன்னறிவிப்பின்றி

இருப்புப் பாதையின்
நடுவே கிடந்தது
உணவுப் பொட்டலம்.
முன்னறிவிப்பின்றி வந்தது
எறும்பு ரயில் வண்டி ஒன்று.

எப்போது ரயில் வரும்?

இருப்புப் பாதையோரம்
எப்போதேனும்
நிழல் காணும் பூக்கள்.

Saturday, June 14, 2008

உயிர்களிடத்து அன்பு

சிறகு முறிந்த பட்டாம்பூச்சி ஒன்று
வெயில் தகிக்கும் சாலையில் உயிர் விடுவதை
விரையும் வாகனங்களுக்குப் பயந்து
வீதியோரம் நின்று மௌன சாட்சியாக
நான் பார்த்த அன்று
கனவில் வந்து விட்டுப் போனார்
முறுக்கிய மீசையோடு சிரித்தவாறு பாரதி.

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

ஒரு துளியின் பல மழைகள்

தங்க அரளி இதழ்களில்
தங்கி நிற்கும் ஒரு துளி
நினைவூட்டி விடுகிறது
தவற விட்ட எல்லா மழையையும்.

Friday, June 13, 2008

"விரைவுப் பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கிறது
ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்."
விஜய் @ vettivambu said, "ஆஹா நெல்லைச்சீமையிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? மிக்க மகிழ்ச்சி. இதென்ன ஹை-கூ கவிதை ரகமா?".
இந்த கவிதை ஹைக்கூ அல்ல. ஒரு அனுபவத்தை நமக்குத் தந்த நிகழ்வை மட்டும் வெளிப்படுத்துவது தான் ஹைக்கூ. "வாசகனின் மனமாகிய குளத்தில் கல்லை எறியும் ஒரு கவிஞனின் முயற்சி ஹைக்கூ. கல்லை எறிவது தான் கவிஞனின் வேலை. அதன் பின் எழும் அலைகளையும் அவனே வரைந்து கொண்டிருக்கக் கூடாது. அதை வாசகனின் சுதந்திரத்துக்கு விட்டு விட வேண்டும் ". இதுவே ஹைக்கூவின் அடிப்படைப் பண்பு. மற்றபடி மூன்று அடிகளில் இருக்க வேண்டும். ஐந்து, ஏழு, ஐந்து அசைகளில் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் கூட நவீன ஹைக்கூவில் தளர்த்தப் பட்டுவிட்டன. எனவே இந்த "முன் செல்லும் இதயம்" கவிதையை இப்படி ஹைக்கூவாக மாற்றலாம்.

பயணம்
விரைவுப் பேருந்தின் முன்
பறந்து கொண்டிருக்கின்றது
பட்டாம்பூச்சி.

இது ஹைக்கூவாக இருக்கலாம் என்று நம்புகிறேன் . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Monday, June 09, 2008

முன் செல்லும் இதயம்

விரைவுப்பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கின்றது
ஒரு பட்டாம்பூச்சி.
பட படப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்.

Wednesday, June 04, 2008

இதற்கும் வேண்டுமா தலைப்பு?

உன்னுடைய குழந்தைக்குப் பெயர் வைப்பதெல்லாம்
ஊரார் அழைக்கத் தான்.
உன்னுடைய குழந்தை உனக்கெப்போதும்
உன்னுடைய குழந்தைதானே.
என்னுடைய கவிதைக்கும் பெயர் வேண்டுமென்றால
ஏதேனும் இட்டுக் கொள்.
என்னுடைய கவிதை எனக்கெப்போதும்
என்னுடைய கவிதையே தான்.

சுவரொட்டிகளை ஒட்ட சில சுவர்கள்

சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சியில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாபார நிறுவனங்களின் வாசல்கள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. சாலை விபத்துகள் நிகழ்வதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் எல்லா விதமான திரைப்படச் சுவரொட்டிகளைப் பற்றி கேட்பாரில்லை. விளம்பரப் பலகைகளை விடவும் அதிகம் கண்ணையும் கருத்தையும் கவர்பவை திரைப்படச் சுவரொட்டிகள் என்பதே எனது எண்ணம். தமிழ் நாட்டில் சில மாநகராட்சிகளில் பொது இடங்களில் ஆபாசச் சுவரொட்டிகள் ஒட்டப் படுவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இங்குள்ள நிலைமையையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எத்தகைய திரைப்படச் சுவரொட்டிகளும் பொது இடங்களிலும், பள்ளிகளின் அருகிலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் கூட ஒட்டப்பட்டுள்ளன. இவற்றால் சாலை விபத்துகளுக்கு மட்டுமல்ல மன விபத்துகளுக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் காப்பது போல அவர்களின் மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது போன்ற சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப் படுவதை நமது மாநகராட்சியிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செய்திப் பலகை அமைத்திருப்பது போல செய்தி, விளம்பரச் சுவரொட்டிகளுக்கு என்று குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி அதற்கு என கட்டணமும் பெற்றால் நகரும் தூய்மை ஆகும். விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்தால் இரு வகையிலும் மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கூடுதல் வருவாய் கிட்டும். பல்வேறு விஷயங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளும் நெல்லை மாநகராட்சி இதையும் கவனித்தால் நமது நெல்லை வெள்ளையாக மாறிவிடுமே விரைவில்?

Wednesday, May 28, 2008

காற்றே மெல்ல வீசு

எறும்பு ஊர்கின்ற
இலையொன்று உதிர்கின்றது
இளங் காற்று வீசுகையில்.

Saturday, May 24, 2008

நம் நிலவின் பயணம்

உன் கடலின் மேல் எழுந்த
நிலவினது பிம்பம்
என் ஆற்றின் மேல் விழுந்தது.
பின் யார் மலையிலேனும்
துயிலக்கூடும் அந்நிலவு.

Friday, May 23, 2008

ரயில் பயணத்தில் கூட வந்த மழை

குளிர் காற்றோடு கை குலுக்கி வந்த போது
குறுக்கிட்டுத் தடுத்தது மழை.
கோபித்துக் கையை உள்ளிழுத்துக் கொண்ட பின்
கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டவாறு
கூடவே வந்தது சாரல்.

மழை நிலவு

கண்ணாடி ஜன்னலில்
விளக்கின் எதிரொளி
நிலவானது
மழை இரவில்.

Thursday, May 22, 2008

நதி

தூர மலைத் தொடரில்
துளியாய்த் தெரியும்
காலடியில் ஓடும் நதி.