Tuesday, October 13, 2009

வட்ட வட்டக் கனவு

பிரியமுள்ள பெண்மணிக்கு
பீங்கான் வளைகளோடு
பரிசளித்தேன் ஒரு புன்னகையை.
பெரிதாயிருப்பதாக அவர்
குறையின்றிச் சொன்ன நாளில்,
தோள் வரைக்கும் சென்ற வளைகள்
நானாக மாறி தனைக் கொஞ்சும்
கனவொன்றை அவர் கண்டிருக்கக்கூடும்.

பிறிதொரு நாள்
மீளக் கிடைத்த பரிசுகளில்
புன்னகைத்துக் கொண்டிருந்தன
பீங்கான் வளைகள்.
மணிக்கட்டை மீறாத வளைகளை
உடையாமல் அணிந்துகொண்ட அவ்விரவில்
ஒரு குழந்தையாக மாறி
அவர் தோள்களில் தவழ்ந்த
கனவினின்று விழித்தெழுந்தேன்

வட்ட வட்டமாகத்
தீர்ந்து கொண்டிருக்கிறது
அவ்விரவு மெதுவாக.

(C) karthikaneya@gmail.com

தேவதைகளின் மொழி

அந்த ஆறு வயது
இரயில்சிநேகனின் மொழி
இரகசியமானது
வார்த்தைகளைப் பரிமாறும் பயிற்சிக்கு
சென்று வருகிறான் அன்றாடம்.
என்றாலும் தீர்ந்ததில்லை அவன்
உரையாடல் எந்நாளும்.

முகம் திருப்பிக்கொள்வான்
முத்தமிட்டு மயக்கிடுவான்
தலை சாய்த்துப் புன்னகைப்பான்
தாய் மடியில் முகம்புதைப்பான்
உதடுகளை மடித்துவைத்து
'உம்'மென்று அமர்ந்திருப்பான்

அவன் மொழியோ
வசீகரமானது
வழக்குக்கு மிக மிகப் புதிது
தேவதைகளின் உலகில்
பயன்பாட்டில் இருக்கக்கூடும்

வார்த்தைகளை ஒளித்து வைத்து
கண்ணாமூச்சி ஆடும் அவன்
அசைவுகளின் அர்த்தங்கள்
மெல்ல மெல்ல அறிந்த பின்னும்
நிறம் மங்கிய மாலைகளில்
ஒவ்வொரு நாளும்
விடைபெற்றுச் செல்கையில் - அவன்
கையசைப்பில் உதிர்ந்துகொண்டுள்ளன
பரிச்சயமாகாத - இன்னும்
பலவண்ணச் சொற்கள்.

(c) karthikaneya@gmail.com