Monday, December 21, 2009

மரபுவழிக் கதைகள்

தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com

Thursday, December 10, 2009

மெய்ம்மையின் சங்கேதம்

மறுக்கப்படும் பகிர்தல்
மறதியின் மீதொளிரும் வண்ணப்பூச்சு
துயருறுவதாகக் காட்டும் பழம்மரபு
ஏளனப்புன்னகையின் முகமூடி
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
சமாதான உடன்படிக்கை
போர் தொடுக்கும் முன்னான முரசறைதல்
தன்முனைப்பற்ற சரணடைதல்
குரூர தண்டனையின் ஒப்பனை முகம்...
யாதொன்றின் சங்கேதமாகவும்
சில பொழுதுகளில் வெளிப்படும் -
'மன்னித்து விடு'

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 09, 2009

பொய் புனை பருவம்

வியந்துகொண்டே இருக்கத்தான்
மாறுகின்றன பருவங்கள்;
மழைக் காலங்களில்
மழை பார்த்தும்
மற்ற காலங்களில்
மழை குறித்தும்.

இலையுதிர் காலங்களைக் குறித்து
வியப்பதற்கு ஏதுமற்றிருந்தது
சிறு தூறலை அது
நினைவூட்டும் வரை

பருவங்கள் எல்லாம் இப்போது
பொய் புனைந்து
நடமாடத் தொடங்கிவிட்டன
மழைப் பைத்தியம் கொண்டு...

(C) karthikaneya@gmail.com

Tuesday, October 13, 2009

வட்ட வட்டக் கனவு

பிரியமுள்ள பெண்மணிக்கு
பீங்கான் வளைகளோடு
பரிசளித்தேன் ஒரு புன்னகையை.
பெரிதாயிருப்பதாக அவர்
குறையின்றிச் சொன்ன நாளில்,
தோள் வரைக்கும் சென்ற வளைகள்
நானாக மாறி தனைக் கொஞ்சும்
கனவொன்றை அவர் கண்டிருக்கக்கூடும்.

பிறிதொரு நாள்
மீளக் கிடைத்த பரிசுகளில்
புன்னகைத்துக் கொண்டிருந்தன
பீங்கான் வளைகள்.
மணிக்கட்டை மீறாத வளைகளை
உடையாமல் அணிந்துகொண்ட அவ்விரவில்
ஒரு குழந்தையாக மாறி
அவர் தோள்களில் தவழ்ந்த
கனவினின்று விழித்தெழுந்தேன்

வட்ட வட்டமாகத்
தீர்ந்து கொண்டிருக்கிறது
அவ்விரவு மெதுவாக.

(C) karthikaneya@gmail.com

தேவதைகளின் மொழி

அந்த ஆறு வயது
இரயில்சிநேகனின் மொழி
இரகசியமானது
வார்த்தைகளைப் பரிமாறும் பயிற்சிக்கு
சென்று வருகிறான் அன்றாடம்.
என்றாலும் தீர்ந்ததில்லை அவன்
உரையாடல் எந்நாளும்.

முகம் திருப்பிக்கொள்வான்
முத்தமிட்டு மயக்கிடுவான்
தலை சாய்த்துப் புன்னகைப்பான்
தாய் மடியில் முகம்புதைப்பான்
உதடுகளை மடித்துவைத்து
'உம்'மென்று அமர்ந்திருப்பான்

அவன் மொழியோ
வசீகரமானது
வழக்குக்கு மிக மிகப் புதிது
தேவதைகளின் உலகில்
பயன்பாட்டில் இருக்கக்கூடும்

வார்த்தைகளை ஒளித்து வைத்து
கண்ணாமூச்சி ஆடும் அவன்
அசைவுகளின் அர்த்தங்கள்
மெல்ல மெல்ல அறிந்த பின்னும்
நிறம் மங்கிய மாலைகளில்
ஒவ்வொரு நாளும்
விடைபெற்றுச் செல்கையில் - அவன்
கையசைப்பில் உதிர்ந்துகொண்டுள்ளன
பரிச்சயமாகாத - இன்னும்
பலவண்ணச் சொற்கள்.

(c) karthikaneya@gmail.com

Thursday, September 24, 2009

பனி இரவின் ரகசியம்

விடியும் வரையிலா
விழித்திருக்கும் வரையிலா
குளிரில் நடுங்கும்
ஓடை நிலா

(C) karthikaneya@gmail.com

Wednesday, August 05, 2009

தூஉம்...

இன்றும் நாம்
உணவாய் அருந்தினோம்
என்றோ பெய்த மழையைத்தான்.

(C) karthikaneya@gmail.com

Thursday, June 11, 2009

சொல்லாமல் சொன்னது


வார்த்தைகள் எல்லாம்
வெறும் ஒலிக்குறிப்பாக...
பரிமாறிக்கொண்ட
மௌனங்களின் இறுதியில்
உடைபட்டது நிசப்தம்
ஒரு கண்ணீர்த் துளியில்.

(C) karthikaneya@gmail.com

Friday, May 29, 2009

தோல்வியின் பதிவு

தேவ தருணங்களைப்
பதிவு செய்ய முயலாதே
தோற்றுப்போவாய் என
எச்சரித்திருந்தாள்
வாகனத்தின் பின் சாளரம் வழியே,
சிறகுகளை மறைத்து
சிறு விரல்களை அசைத்து
எனை அழைத்து அருள்செய்த
என் குட்டி தேவதை.

(C) karthikaneya@gmail.com

Tuesday, May 19, 2009

ஆரஞ்சுப் புன்னகை

ஆரஞ்சு நிலவாக ஒளிர்ந்த
அந்திச் சூரியன்
அலுவல் நேரம் தாண்டியும்
அகலாமல் நின்றது மேற்கில் -
ரசிக்கப்படாத ஏக்கத்தில்.

அனிச்சையாய் நகரும் கூட்டத்தில்
பரபரப்பான கடைவீதியின்
சாலையைக் கடக்கையில்
தற்செயலாய்
திரும்பிப் பார்த்து
திகைத்து நின்றபோது
ஸ்தம்பித்தது போக்குவரத்து.

புன்னகைத்தவாறே
கீழிறங்கத் தொடங்கியது
சூரியன்.
(C) karthikaneya@gmail.com

நண்பர்கள் பரிசளித்த தோழிகள்

'கோபிக்கிறாள் என் மனைவி
குறுஞ்செய்தி அனுப்பாதே'
என்றொரு நண்பன்
கூறிய பின்னர்,

தன் கணவன் எனை அழைக்கும்
செல்லப் பெயர் சொல்லி
அழைத்துப் பேசினாள்
இன்னொரு நண்பனின் மனைவி.

கொடுத்து வைத்த - என்
தோழர்களுக்கு வாய்த்திருக்கிறது
அத்தனை சீக்கிரம் சலித்துப் போகாத
குடும்ப வாழ்க்கையோடு
கணவன் என்னும் கதாபாத்திரம்.
(C) karthikaneya@gmail.com

Monday, May 11, 2009

சந்தேகத்துக்குரிய 'உயிர்த்தோழி'

ஒரு கார்காலத்தின் முதல்நாளில்
மழையின் வண்ணம் குறித்து
விவாதிக்கத் தொடங்கினோம்.

இளந்தூறலாகத் தொடங்கிய மழை
வானவில் எழும் முன்
கரைந்துபோனது.

அடுத்தடுத்த நாட்களிலும்
காணக்கிடைத்த
மழைக்கான சாத்தியக்கூறுகளை
மறுத்த நீ
இடியையும் மின்னலையும்
என்னிடம் அனுப்பிவைத்தாய்.

நிலை மீளும் முன் - ஒரு
வானவில்லையும்
வரைந்து பரிசளித்தாய்.

நம் முதல் நாள் உரையாடலில் - நீ
உயிர்த் தோழி என்றுரைத்த சொற்கள்
இப்போது - மெல்ல
நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன.

Wednesday, April 29, 2009

தீராத் தேடல்

ஒரு முகம் தேடி
ஓயாமல் அலைகிறது
கோடைகள் தோறும் வெயில்.

இன்றும் கூட - ஒரு
தென்னங்கீற்றின்
முன் தின மழைத் துளியில்
தொடங்கிய பயணத்தில்
முன்பகலில் இளைப்பாறிக்கொண்டிருந்தது
மூங்கில் இலை நுனியில் - பின்
மெல்ல உருகத் தொடங்கியது - ஒரு
குயிலின் கானம்.

குரலின் முகம் தேடி
தகித்து எரித்து
அலைந்து களைத்து
உறங்கத் தொடங்கிய வெயிலின்
உறங்கா கேள்வி:
'அத்துவானக் காட்டில்
யாருக்கிந்த தாலாட்டு?'

கோடைகள் முடிந்தாலும் - இந்தக்
குயில்களுக்கு ஓய்வில்லை
நீ அறியாயோ வெண்வெயிலே!

(C) karthikaneya@gmail.com

Saturday, April 25, 2009

மிச்சமிருக்கும் பரஸ்பரமல்லாத ஒன்று

புறக்கணிப்புகளின் காயங்களைப்
புன்னகையின் பின்னால்
ஒளித்துக் கொண்டேன்.
கண்ணீர்த் துளிகளுக்குத்தான்
தேடிக் கொண்டிருந்தேன்
ஓர் இடம் - பின்
தீர்மானித்துக் கொண்டேன்
எதிர்ப்படும் ஒரு மழை நாளில்
தடயங்களின்றித்
தொலைத்துவிட வேண்டுமென்று.

பின்னொரு நாள் வந்தது
அந்த மழை நாள்
உன்னை எதிர்நோக்கியிருந்த
மழை நாட்கள்
இத்தனை கடுமையில்லை என
துக்கித்தவாறு.

திரட்டிச் சென்ற
கண்ணீர்த் துளிகளைக்
கரைத்த மழையில்
நனைந்தோ நனையாமலோ
வீடு திரும்பி
தலை துவட்டிக் கொண்டேன்.

தும்மல் எழுந்தது
என்னை நினைத்திருக்க
வாய்ப்பேயில்லாத
உன்னை
நினைவூட்டியவாறு.

(C) karthikaneya@gmail.com

முள்ளின் மனம்

வேடிக்கையான
விளையாட்டுப் பொருளானது
என் கைக்கடிகாரம்
குழந்தைக்கு.

காதருகே வைத்துக் கேட்டும்
கையில் கட்டிப் பார்த்தும்
கொஞ்சிப் பேசியவாறும்
முத்தம் கொடுத்துக் கொண்டும்
நட்பாகிவிட்டது கடிகாரத்தோடு.

வருத்தப்படாதவாறுதான் - அதைத்
திருப்பி வாங்கிக்
கட்டிக்கொண்டு வந்தேன்.

வருத்தமில்லையென்று
யார் சொன்னது என்றது
ஓடாமல் நின்ற கடிகார முள்.

பின்
ஓடத் துவங்கியது
எனது எந்த சமாதானத்துக்கும்
செவி கொடாமல்
வட்டப் பாதையினின்று குதித்து
குழந்தையின் வீடு நோக்கி.

(C) karthikaneya@gmail.com

Thursday, April 09, 2009

வேரின் வெளி

ஒரு தொட்டிச் செடியின் வேராக
உன்னுள் சிறைப்படுவேன் - நீயோ
உன் ஆகாய வெளியாக
உணர்கின்றாய் என்னை.

(C) karthikaneya@gmail.com

Monday, April 06, 2009

இரவைத் தின்ற வார்த்தைகள்

இரவு ரயில் பயணமொன்றில்
பேச்சினிலே பேரார்வமென்று
அந்நிய மொழியில் அறிமுகமானான்
எதிர் இருக்கை சிநேகிதன்.
'டாவின்சி கோட்
இந்திய இலக்கியங்கள்
இரவு உணவு
சென்னை ஆட்டோக்கள்
தமிழகத் தந்தை
ஜெர்மன் தாய்
இங்கிலாந்து கல்வி'
இன்னும் ஏதேதோ
ஆல்கஹால் மணம் - என்
விழிகளில் பரவப் பேசிவிட்டு
உயர பெர்த்தில் படுத்துக்கொண்டான்.
உறக்கத்தின் ஊடே - ஏதோ
உணர்வு தீண்ட
திடுக்கிட்டு விழித்தேன்.
ஒருக்களித்துப் படுத்து
உற்றுப் பார்த்திருந்தவன்
விழிகளில் சந்தித்து
'டோன்ட் வொர்ரி' - என
வழிய விட்ட வார்த்தைகள்
உறிஞ்சிக் கொண்டிருந்த
மிச்ச இரவில்
என்னோடு விழித்திருந்தன - என்
போர்வையின் பொம்மைகளும்.
(C) karthikaneya@gmail.com

நானும் அழகாய்த்தான் இருந்திருப்பேன்

பத்திரப்படுத்தி வைத்த - என்
பழைய உடைகளை அணிந்தது
புதிய வரவான குழந்தை.
தொட்டிலில் கிடந்த என்னை
எட்டி நின்று நான்
பார்ப்பது போலிருந்தது.

(C) karthikaneya@gmail.com

கல்யாணத் தெரு

அணில்கள் விளையாடும்
ஆகாவழி மரம் ஒன்றும்
வண்ணத்துப்பூச்சிகள் வட்டமிடும்
அரளிச் செடி ஒன்றும்
அருகருகே வளர்ந்தன
புதிதாய் வந்த தெருவில்.
ஆச்சரியப்படும் வேகத்தில்
அரளிச் செடி வளர்ந்து
அந்த மரத்தின் கையை
எட்டிப்பிடித்த நாளில்தான்
எரியத் துவங்கியது தெருவிளக்கு.
கல்யாணத் தெரு போல்
களைகட்டி விட்டது இப்போது
மஞ்சள் வெளிச்சத்தில்
நனையும் தெரு.

(C) karthikaneya@gmail.com

குற்றவாளியின் சாயல்

உன் சிநேகம் கிடைத்தது
நான் எதிர்பாரா வேகத்தில்.
ஏற்றுக்கொள்ளத் தயங்குமளவு
இருந்தது உன் நேசம்.
எல்லாவற்றுக்கும் காரணம்
என் பெயரில் இருந்த
உன் காதலனின் சாயல்.
பின்னொரு நாள்
என் தோள்களில் சிந்திய
கண்ணீர்த் துளிகளால்
உன் காதலின் பிரிவைக் கூறினாய்.
அன்றிலிருந்து
உன் நேர்ப்பார்வை அஞ்சி
விலகிச் செல்கிறேன்.
தடயங்கள் ஏதுமற்ற காதலுக்கு
மௌன சாட்சியாக மாறியபின்
இப்போதெல்லாம் - யாரிடம்
என் பெயர் கூறும்போதும்
தொனிக்கிறது - ஒரு
குற்றவாளியின் சாயல்.

(C) karthikaneya@gmail.com

ஏதோ ஒரு பொழுது...

மழைத்துளி போல் சீராக
மரங்களின் இலைகள் சிந்த
கதவிடுக்கில் வழிவதுபோல்
காற்று மெல்ல கசிந்து வீச
அதுவரை யாரும்
அறிந்திராத சாயலில்
மஞ்சள் வெளிச்சம்
எங்கும் பரவ
மாலையோ காலையோ என
மனம் மயங்கிய பொழுதொன்றில்
மேலெழும்பி வந்து கொண்டிருந்தது
மேற்கினின்று சூரியன்.
(C) karthikaneya@gmail.com

Tuesday, March 31, 2009

இரவுப் பறவையும், நானும், பிறையும்

"முதன்முதலாய் உன்னை
இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன்
ஒரு மூன்றாம் பிறையிடம்.
"நானும் தான்" என்றது.
நான் பார்த்த பிறையைப்
பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை.
அதையும் அப்போதுதான்
பார்க்கிறேன் என்றேன்.
"ஆமாம் நானும்" என்றது பிறையும்.

(C) karthikaneya@gmail.com

Saturday, March 21, 2009

பள்ளிக் கூண்டு


பால்மணம் வீசும் மேனியில்
பறவைக் கூண்டு வாசம் மெலிதாக
பள்ளி சென்று வந்த முதல் நாளில்.

(C) karthikaneya@gmail.com

Monday, March 09, 2009

கொடி ரோஜாக்கள்


ஓரிரு நாட்கள் பூக்கின்றன
இரண்டாம் மாடி பால்கனி தொட்டியில்
சிலவண்ண ரோஜாக்கள்.
முதல் மாடி பால்கனியில்
மலர்கின்றன அனுதினமும்
பலவண்ண ரோஜாக்கள்
இளம்தாய் உலர்த்தும்
சின்னஞ் சிறு உடைகளில்.

(C) karthikaneya@gmail.com

உன்னதம் கொன்று...


பகிர்ந்து கொள்ள
விரும்பிய தருணத்தைப்
பதிவு செய்ய,
பரிச்சயமற்ற
சொற்களின் தேடலில்,
மெல்ல
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
மொழிகள் எளிதில்
மொழிந்து விடமுடியாத
மென்கவிதை போன்ற
அவ்வுணர்வு.

(C) karthikaneya@gmail.com

மழை பெய்யாத மழை நாள்

கருமேகம் சூழ்ந்து
காற்றும் கூட குளிர்ந்து
பொழுது கொஞ்சம் சாய
புத்தி மெல்ல மயங்க
முதல் துளிக்கு ஏங்கி
அண்ணாந்து வான் பார்க்கையில்
ஏமாற்றிச் செல்கிறது
ஏதோ நினைத்துக்கொண்ட மழை.
(C) karthikaneya@gmail.com

இழையும் நட்பு

ஏதோ ஒரு தருணத்தை
நினைவில் வைக்க
இழைநூல் ஒன்றை
துண்டுகளாக்கி
பத்திரம் செய்தோம்.
எத்தனையோ
ஆண்டுகள் கழிந்தும்
எதற்காக என்ற
காரணம் மறந்தும்
இந்த மெல்லிழை
இறுக்கிப் பிணைக்கிறது
தொலைதூரம் விலகிச் சென்ற
தோழர்களையும்.

(C) karthikaneya@gmail.com

என் கோப நிலா


தற்செயலாய்
வானம் பார்க்க நேர்ந்த
மூன்றாம்பிறை நாளில்
என்னைக் கண்டதும்
தென்னங் கீற்றுகளின்
பின்னோடி - மேகத்தில்
முகம் மறைத்தபோதுதான்
நினைவெழுந்தது
'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.

(C) karthikaneya@gmail.com

Wednesday, March 04, 2009

ஒவ்வொன்றும் ஒன்றும்

ஒவ்வொரு துளியிலும்
மழை
என்னிடம்
ஒரே ஒரு குடை

(C) karthikaneya@gmail.com

Tuesday, February 24, 2009

ஈரம் உலரா கதைகள்

ஒவ்வொருமுறையும்
உலராத ஈரத்துடன்
புதுப்புதுக் கதைகளைச்
சலிக்காமல் சொல்கிறது
சுவாரஸ்யமாகவும் - இந்த
வேலையற்ற மழை.


(C) karthikaneya@gmail.com

Wednesday, February 18, 2009

முதல்முறை

இப்போதுதான்
பறக்கிறேன் என்றது
காற்றில் அலையும்
ஒற்றை இறகு.

(C) karthikaneya@gmail.com

உருகும் சொல்

உறைபனிக் கத்தி போல்
செருகிக் கொண்டாய்
உன் உரையாடல்களோடு
சிலவேளை நான் பரிமாறும்
மௌனங்களை.
உன்னுள் அவை
உருகத் தொடங்கியபின் பார்
ஒருபோதும் நிற்காது
என் சொற்கள்.

(C) karthikaneya@gmail.com

சிறகு

கிளையினின்று
விடுபட்ட நொடியில்
பறக்கத்தொடங்கியது
ஒரே ஒரு சருகு.

(C) karthikaneya@gmail.com

உடுக்கை நட்பு

தோழன் தோளில்போல்
வாஞ்சையோடு
கைபோட்டிருந்தது
பக்கத்து கொடியில்
என் சட்டை.

(C) karthikaneya@gmail.com

Wednesday, January 28, 2009

வட்டத்துக்கு வெளியே

எந்த வட்டத்துக்குள்ளோ
சதுரத்துக்குள்ளோ
இல்லாவிடினும்
இந்த வானுக்குக் கீழே
எங்கோ சிலர்
இருக்கத்தான் செய்கிறார்கள்
நாம் சொல்லி அழைக்கப்
பிரியப்படும் பெயருடன்.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 24, 2009

விடுதிக் குறிப்பு - அடம்பிடிக்கும் தூக்கம்

பக்கத்தில் படுக்க வைத்து
தட்டிக் கொடுத்தாலும்
கட்டிப்போட்டாலும்
கதை சொல்லிப் பார்த்தாலும்
காலில் விழுந்து கேட்டாலும்
கண் மறைத்து ஓடிவிடும்.
எடுத்துக்கொள்ளச் சொல்லி
ஏங்குகிற குழந்தைபோல்
எல்லா அறைகளையும்
எட்டிப் பார்த்து ஏமாந்து
என்னிடமே திரும்புகையில்
இரவு விடிந்திருக்கும்.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 10, 2009

எல்லா மழையும் மழையல்ல

இலைகளில் பனித்துளிபோல்
வீழ்ந்து தூய்மையாக
மலர்களில் தேன்துளிபோல்
நுழைந்து இனிமையாக
குழந்தையின் முத்தம்போல்
தீண்டி மென்மையாக
கனவின் இசையைப்போல்
வழிந்து மயங்கச் செய்த
அந்தி மழை அத்தனை சுகமாயில்லை.
என் ஊரிலும் இப்போது மழை பெய்கின்றதாம்!

(C) karthikaneya@gmail.com

என் இரவின் இசை

என் கைக்கடிகார
நொடிமுள்ளின் லயம் விட்டு
யார் யார் வீட்டுக்
கடிகார ஓசையெல்லாமோ
உன்னித்து ரசித்துக் கொண்டிருக்கின்றது
உறக்கம் மறுத்த
என் இரவு.

(C) karthikaneya@gmail.com