Monday, May 24, 2010

நதி நிலவு

சூல் வளைகளைச்
சுமந்தோடும் நதியலை மேல்
தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது
சுடலையில் ஆடும் தழலின் பிம்பம்.
பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு
நெருப்போடு நிற்பதும்
வளையோடு நடப்பதும்தான்
பிரபஞ்ச ரகசியம்.

(c) karthikaneya@gmail.com

தனிச்சுற்றுக்கு மட்டும்...

கதவு திறந்த நண்பர்
கைகளை விரித்து,
'ஆ ஆ ஆ' என வரவேற்றார்.
புன்சிரித்த அவர் மனைவி,
'வுச்சு' என்றார்
இருக்கையைக் காட்டி.
இயல்பாகச் செய்வது போல்
நீவிக் கொண்டேன் காது மடல்களை.
தத்து பித்தென்று நடந்து வந்த
அவர்கள் மகன்
'புத்து புத்து' என்றான்.
புரியவே இல்லை எனக்கு - அவன்
புத்தகத்தில் என் கால் பட்டிருந்தது.
வேற்றுமொழிப் படம் பார்ப்பது போல்
வெறுமையான சில எதிர்வினைகளின் பின்,
தலைவாழை இலை போட்டு அழைத்தார்கள்,
'தச்சு மம்மு பப்பு மம்மு சாப்பிடலாம்.'
இயற்பியல் விதிகளின் புண்ணியத்தில்
எப்படியோ சாப்பிட்டு முடித்தபின்,
என் முதுகை நீவிய சிறுவன்
'புஜ்ஜு புஜ்ஜு' என்றான் என் அம்மாவின் குரலில்.
தலைசுற்றிக் கொண்டு மயங்கத் தொடங்குகையில்
தலையணை தந்து,
'கண்ணை மூடி லோலிலோ' என்றனர் மூவரும்.
புதிய தலைமுறைகளுக்கான
சொற்களை உருவாக்கும்
சிந்தனையாளன் உலவும்
அவ்வீட்டில் நுழைந்து
சுயநினைவோடு திரும்ப உதவக்கூடும்
அவர்களின் குடும்ப நிகண்டு.
பயிற்சி தர இருக்கவே இருக்கிறார்
நூலாசிரியர் வாண்டு.

(c) karthikaneya@gmail.com

அலைத்துளி

"இருள் கீறி விடியல் தொட
எத்தனிக்கையில்
கடல் பிரளயம் போல்
தோற்றுகிறது பூமி.
பழுதின்றி வந்து விடுகிறாய்
நீ மட்டும்
பருவத்தில் வர்ஷிக்கும் மழைத் துளி போல்" -
சூரியன் சுட்டதும் சொன்னது
நீலம் திறந்து வெளிவந்த நிலவு:
"கடலும் மழையும்
ஒன்றென நீ அறியாயா?"

(c) karthikaneya@gmail.com

மிச்சமிருக்கிறது சூரியன்

அணில் கொறித்துக் கொண்டிருந்தது
வெயிலை
மரம் பார்த்துக் கொண்டிருந்தது.

(c) karthikaneya@gmail.com

Tuesday, May 04, 2010

அந்நிய நிழல்

மேஜை விளக்கின்
மென் நிலவொளியில்
பைத்தியமாயிருக்க சில குறிப்புகளை
வாசித்துக் கொண்டிருந்தேன்
ஒரு முன்னிரவில்.

ஓரிரு குறிப்புகள்
ஒத்திருந்தன என்னோடு.

மின்சாரம் மெதுவாக
விடைபெற்றுச் சென்றபின்
மெழுகுவர்த்தி ஒளியில்
வாசித்து முடித்தேன்
மேலும் சில குறிப்புகள்.

சுவடின்றி அறைமுழுதும்
சூழ்ந்துவிட்ட நிலவொளி போல்
பயம் நுழைந்தது
மிக மெல்ல மனதில்.

வெறிகொண்டாற்போல்
துணிகளைக் கலைத்துப் போட்டு
மடித்து வைத்தேன்.

வெட்கம் கெட்டு
கொஞ்ச நேரம்
அழுது தீர்த்தேன்.

தயக்கம் துறந்து - நாம்
பகிர்ந்து கொண்ட தருணத்தை
நினைவடுக்கில் மெதுவாகப்
புரட்ட முயன்றேன்.
நம் ஆயுளின் வெட்கமெல்லாம்
குறுக்கிட்டு நின்றது அங்கே.

ஒரு பகிர்தல் நம்மை
அந்நியமாக்கிவிட்டது
வினோதம்தான்

திரைச்சீலை மெதுவாக
உயர்ந்து தாழ்கிறது
சுவரில் என் சாயை
படிந்து எழுந்து படிகிறது

நிழலுக்கும் தனியே
ஓர் உயிர் உண்டு என்று
நம்பியிருக்கவில்லை
நான் இதுவரை.

இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஒரு பைத்தியத்தின் குறிப்புகளை...

(C) karthikaneya@gmail.com