Saturday, July 17, 2010

நட்சத்திரக் கதைசொல்லி

அனுபவங்கள் எல்லாம்
ஆகாயத்தில் மின்னுவதாக
அறியாமல் சொல்லிவிட்டான் ஒருநாள் - என்
நச்சரிப்பு தாளாமல் பின்
நாளொரு கதை சொல்லத் தொடங்கினான்
நட்சத்திரக் கதைசொல்லி.
அதில் யாதொரு கதையும்
இடம்பெறவில்லையாம் இன்னும்
ஆகாய விண்மீன் கூட்டத்தில்.

(c) karthikaneya@gmail.com

விஷ முத்தம்

பேசத் துணியாத
பதங்களெல்லாம்
படிந்து தேங்கியுள்ளன
இதழ்களிலேயே.
உனைக் கொல்லும் விஷமாக
இனிக்கக்கூடும்
முதல் முத்தம்.

(c) karthikaneya@gmail.com

நெடுஞ்சாலை

எழுத மறந்த கவிதைகளை
இளங்காலைச் சாலைகளில்
இதமாய்த் தூவுகின்றன மரங்கள்.
நடை மறந்த வாழ்க்கையில்
பாசாங்கு செய்கிறேன்
படிக்க நேரம் இல்லாததாக.

(c) karthikaneya@gmail.com

இரை

குருணை அரிசியும்
கொறிக்க பாப்கார்னும்
குளிர்நீரும் வைத்தாலும்
பறந்து திரிந்து இரை தேடாமல்
பால்கனியில் எட்டிப்பார்ப்பதில்லை
இந்தச் சிட்டுக்குருவிகள் ஒருநாளும்.

(c) karthikaneya@gmail.com

மழையும் மழை சார்ந்த...

புதிய சொற்களைத் தாகித்து
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
அதற்காகத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,
'அன்றலர்ந்த...' என்பது போல்
அழுகிய சொற்களை வீசிவிட்டு
புத்தம் சொற்களை.

பழகிய பாடுபொருள்களைப் பழித்துவிட்டு
புதியவை எழுதிப் பார்க்க வேண்டும்.

யார் பழித்தால் என்ன,
எல்லார்க்கும் பொழியும் மழை
தந்துவிடக் கூடும்;
கவிதையை உயிர்ப்பிக்கும் சொற்களை.

இளமழை வந்தேவிட்டது
எதிர்பார்த்திருந்த வேளையில்.
சொற்கள் குறித்து மெதுவாகத் தொடங்குகையில்,
அதற்கென்ன தாகமோ தெரியவில்லை;
அள்ளிக் குடித்துச் சென்றே சென்று விட்டது
அந்தக் கவிதையை.

ஊர் ஊராகக் கொட்டித் தீர்க்கிறது
மழை இப்போது,
இன்னும் எழுதாத என் கவிதையை.

(c) karthikaneya@gmail.com

Monday, May 24, 2010

நதி நிலவு

சூல் வளைகளைச்
சுமந்தோடும் நதியலை மேல்
தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது
சுடலையில் ஆடும் தழலின் பிம்பம்.
பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு
நெருப்போடு நிற்பதும்
வளையோடு நடப்பதும்தான்
பிரபஞ்ச ரகசியம்.

(c) karthikaneya@gmail.com

தனிச்சுற்றுக்கு மட்டும்...

கதவு திறந்த நண்பர்
கைகளை விரித்து,
'ஆ ஆ ஆ' என வரவேற்றார்.
புன்சிரித்த அவர் மனைவி,
'வுச்சு' என்றார்
இருக்கையைக் காட்டி.
இயல்பாகச் செய்வது போல்
நீவிக் கொண்டேன் காது மடல்களை.
தத்து பித்தென்று நடந்து வந்த
அவர்கள் மகன்
'புத்து புத்து' என்றான்.
புரியவே இல்லை எனக்கு - அவன்
புத்தகத்தில் என் கால் பட்டிருந்தது.
வேற்றுமொழிப் படம் பார்ப்பது போல்
வெறுமையான சில எதிர்வினைகளின் பின்,
தலைவாழை இலை போட்டு அழைத்தார்கள்,
'தச்சு மம்மு பப்பு மம்மு சாப்பிடலாம்.'
இயற்பியல் விதிகளின் புண்ணியத்தில்
எப்படியோ சாப்பிட்டு முடித்தபின்,
என் முதுகை நீவிய சிறுவன்
'புஜ்ஜு புஜ்ஜு' என்றான் என் அம்மாவின் குரலில்.
தலைசுற்றிக் கொண்டு மயங்கத் தொடங்குகையில்
தலையணை தந்து,
'கண்ணை மூடி லோலிலோ' என்றனர் மூவரும்.
புதிய தலைமுறைகளுக்கான
சொற்களை உருவாக்கும்
சிந்தனையாளன் உலவும்
அவ்வீட்டில் நுழைந்து
சுயநினைவோடு திரும்ப உதவக்கூடும்
அவர்களின் குடும்ப நிகண்டு.
பயிற்சி தர இருக்கவே இருக்கிறார்
நூலாசிரியர் வாண்டு.

(c) karthikaneya@gmail.com

அலைத்துளி

"இருள் கீறி விடியல் தொட
எத்தனிக்கையில்
கடல் பிரளயம் போல்
தோற்றுகிறது பூமி.
பழுதின்றி வந்து விடுகிறாய்
நீ மட்டும்
பருவத்தில் வர்ஷிக்கும் மழைத் துளி போல்" -
சூரியன் சுட்டதும் சொன்னது
நீலம் திறந்து வெளிவந்த நிலவு:
"கடலும் மழையும்
ஒன்றென நீ அறியாயா?"

(c) karthikaneya@gmail.com

மிச்சமிருக்கிறது சூரியன்

அணில் கொறித்துக் கொண்டிருந்தது
வெயிலை
மரம் பார்த்துக் கொண்டிருந்தது.

(c) karthikaneya@gmail.com

Tuesday, May 04, 2010

அந்நிய நிழல்

மேஜை விளக்கின்
மென் நிலவொளியில்
பைத்தியமாயிருக்க சில குறிப்புகளை
வாசித்துக் கொண்டிருந்தேன்
ஒரு முன்னிரவில்.

ஓரிரு குறிப்புகள்
ஒத்திருந்தன என்னோடு.

மின்சாரம் மெதுவாக
விடைபெற்றுச் சென்றபின்
மெழுகுவர்த்தி ஒளியில்
வாசித்து முடித்தேன்
மேலும் சில குறிப்புகள்.

சுவடின்றி அறைமுழுதும்
சூழ்ந்துவிட்ட நிலவொளி போல்
பயம் நுழைந்தது
மிக மெல்ல மனதில்.

வெறிகொண்டாற்போல்
துணிகளைக் கலைத்துப் போட்டு
மடித்து வைத்தேன்.

வெட்கம் கெட்டு
கொஞ்ச நேரம்
அழுது தீர்த்தேன்.

தயக்கம் துறந்து - நாம்
பகிர்ந்து கொண்ட தருணத்தை
நினைவடுக்கில் மெதுவாகப்
புரட்ட முயன்றேன்.
நம் ஆயுளின் வெட்கமெல்லாம்
குறுக்கிட்டு நின்றது அங்கே.

ஒரு பகிர்தல் நம்மை
அந்நியமாக்கிவிட்டது
வினோதம்தான்

திரைச்சீலை மெதுவாக
உயர்ந்து தாழ்கிறது
சுவரில் என் சாயை
படிந்து எழுந்து படிகிறது

நிழலுக்கும் தனியே
ஓர் உயிர் உண்டு என்று
நம்பியிருக்கவில்லை
நான் இதுவரை.

இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஒரு பைத்தியத்தின் குறிப்புகளை...

(C) karthikaneya@gmail.com

Monday, April 26, 2010

தற்செயல் தவறுகள்

தற்செயலான ஒரு மழைத் திவலை போல்
பரிசுத்தமான
புன்னகையை,
நேயத்தை,
ஏக்கத்தை,
கண்ணீர்த் துளியை,
பிறப்பை,
இறப்பை,
பிரிவை,
முத்தத்தை,
கோபத்தை,
தியாகத்தை,
துரோகத்தை,
மன்னிப்பை…
மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின
பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே.

ஒரு எதிர்பார்ப்பில்
ஒரு காத்திருப்பில்
ஒரு அலட்சியத்தில்
ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு போலச்செய்தலில்
புனிதத் தன்மையை இழந்துவிடுகின்றன யாவுமே…

முன்னரே உணர்ந்திருந்தால்
தவற விட்டிருப்பாயா…
உன் சொற்கள்
என்னை மகிழ்த்தியிருக்கக்கூடும்
ஒரு தருணத்தை..?

(C) karthikaneya@gmail.com

தொழில்நுட்பம்

தொழில்நுட்பப் பூங்காக்களின்
கண்ணாடிக் கட்டிடச் சுவர்களை
கயிற்றில் தொங்கிச் சுத்தம் செய்பவன்,
ஓவர்டைமில்
முகம்திருத்தி அனுப்பி வைக்கிறான்
வீடுதிரும்பும் சூரியனை.

(C) karthikaneya@gmail.com

ரகசிய வாசல்கள்

யாராரோ அறியக் கிடைத்தபின்னும்,
நான் நம்புதற்கில்லை
உன் ரகசியங்கள் ஏதும்
என்னிடத்தில் இருப்பதாய்.

தடயங்களை அழிப்பது வீண் வேலை.
உன் ரகசியத்தின் வாசல்கள்
பலவீனமானவை
எப்போதும் திறந்திருப்பவை.
அவற்றை என்னால்
காவல் செய்ய இயலாது.

அன்பு ஒன்றைத் தவிர
யாதொரு பயனுமில்லை
என் சொல்லிலும் செயலிலும்.

உள்ளே என்னை அனுமதிக்காதிருக்க
யோசிக்க சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன.
உன் உலகத்தில் எனக்கோர் இடம்
உனக்கெப்போதும் ஆபத்துதான்!

(C) karthikaneya@gmail.com

Friday, February 05, 2010

பொன்மாலைப்பொழுது...

சில வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன.
சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கின்றன.
ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று
தாழப் பறக்கிறது.
அரைவெள்ளை வண்ணத்துப்பூச்சி
மேலெழும்பி வருகிறது.
இளமஞ்சள் சிறகுகள்
காற்றில் நிறைகின்றன.
உலகமே வண்ணத்துப்பூச்சி மயமாகிவிட்டது
சில வண்ணத்துப்பூச்சிகள்
ஓடித் திரிகிற பூங்காவில்.

(C) karthikaneya@gmail.com

Thursday, February 04, 2010

நீயும் நீயும்...

நீ என்பதும் நீதான் என்று
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.

இப்போது இது என் புத்துலகம்.

பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 30, 2010

அதுவும்...

நீயும் சிந்து
ஒரு கண்ணீர்த் துளியோ
சிறு புன்னகையோ...
அகவெளிப்பாட்டின்
மெய் சாட்சியாக
என் அழுகையினூடே
அப்போது
அங்கே
அது இருக்கட்டும்
அதுவும் இருக்கட்டும்...

(C) karthikaneya@gmail.com

Tuesday, January 05, 2010

நத்தையின் சலனம்

நத்தையின் சலனம் போல்
நகர்ந்திருக்கக்கூடும்
தொட்டாசுருங்கி இலைகள்
விரிவது போல்
விடிந்திருக்கக்கூடும்
அவ்விரவு.
நொடி முள்ளின் ஒரு நகர்வில்
கடந்ததாகத் தோன்றிய
நான் தூங்கியதாக
நினைவடுக்கில் பதிந்திராத
அந்த இரவில்
மீண்டுமொரு முறை தூங்கி
தேடவேண்டும் - அந்த
தொலைந்த இரவின் கனவுகளை.

(C) karthikaneya@gmail.com

Monday, December 21, 2009

மரபுவழிக் கதைகள்

தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com

Thursday, December 10, 2009

மெய்ம்மையின் சங்கேதம்

மறுக்கப்படும் பகிர்தல்
மறதியின் மீதொளிரும் வண்ணப்பூச்சு
துயருறுவதாகக் காட்டும் பழம்மரபு
ஏளனப்புன்னகையின் முகமூடி
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
சமாதான உடன்படிக்கை
போர் தொடுக்கும் முன்னான முரசறைதல்
தன்முனைப்பற்ற சரணடைதல்
குரூர தண்டனையின் ஒப்பனை முகம்...
யாதொன்றின் சங்கேதமாகவும்
சில பொழுதுகளில் வெளிப்படும் -
'மன்னித்து விடு'

(C) karthikaneya@gmail.com

Wednesday, December 09, 2009

பொய் புனை பருவம்

வியந்துகொண்டே இருக்கத்தான்
மாறுகின்றன பருவங்கள்;
மழைக் காலங்களில்
மழை பார்த்தும்
மற்ற காலங்களில்
மழை குறித்தும்.

இலையுதிர் காலங்களைக் குறித்து
வியப்பதற்கு ஏதுமற்றிருந்தது
சிறு தூறலை அது
நினைவூட்டும் வரை

பருவங்கள் எல்லாம் இப்போது
பொய் புனைந்து
நடமாடத் தொடங்கிவிட்டன
மழைப் பைத்தியம் கொண்டு...

(C) karthikaneya@gmail.com