Saturday, July 17, 2010

மழையும் மழை சார்ந்த...

புதிய சொற்களைத் தாகித்து
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
அதற்காகத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,
'அன்றலர்ந்த...' என்பது போல்
அழுகிய சொற்களை வீசிவிட்டு
புத்தம் சொற்களை.

பழகிய பாடுபொருள்களைப் பழித்துவிட்டு
புதியவை எழுதிப் பார்க்க வேண்டும்.

யார் பழித்தால் என்ன,
எல்லார்க்கும் பொழியும் மழை
தந்துவிடக் கூடும்;
கவிதையை உயிர்ப்பிக்கும் சொற்களை.

இளமழை வந்தேவிட்டது
எதிர்பார்த்திருந்த வேளையில்.
சொற்கள் குறித்து மெதுவாகத் தொடங்குகையில்,
அதற்கென்ன தாகமோ தெரியவில்லை;
அள்ளிக் குடித்துச் சென்றே சென்று விட்டது
அந்தக் கவிதையை.

ஊர் ஊராகக் கொட்டித் தீர்க்கிறது
மழை இப்போது,
இன்னும் எழுதாத என் கவிதையை.

(c) karthikaneya@gmail.com

4 comments:

'))')) said...

//ஊர் ஊராகக் கொட்டித் தீர்க்கிறது
மழை இப்போது,
இன்னும் எழுதாத என் கவிதையை.
//

wow...

'))')) said...

மறுபடியும் ஒரு மழைக் கவிதை. மிக அருமை..

'))')) said...

ஆரம்பம் வேறாக பின் வேறாக இருக்கிறது கவிதை.

'))')) said...

உங்கள் கவிதையெல்லாம் ஒரு மழை நாளில் மழையை ரசித்துக் கொண்டே படிக்க வேண்டும்.