"முதன்முதலாய் உன்னை இப்போதுதான் பார்க்கிறேன்" என்றேன் ஒரு மூன்றாம் பிறையிடம். "நானும் தான்" என்றது. நான் பார்த்த பிறையைப் பார்க்க வந்தமர்ந்தது ஓர் ஆந்தை. அதையும் அப்போதுதான் பார்க்கிறேன் என்றேன். "ஆமாம் நானும்" என்றது பிறையும்.
பகிர்ந்து கொள்ள விரும்பிய தருணத்தைப் பதிவு செய்ய, பரிச்சயமற்ற சொற்களின் தேடலில், மெல்ல உயிர்விட்டுக் கொண்டிருந்தது மொழிகள் எளிதில் மொழிந்து விடமுடியாத மென்கவிதை போன்ற அவ்வுணர்வு.
ஏதோ ஒரு தருணத்தை நினைவில் வைக்க இழைநூல் ஒன்றை துண்டுகளாக்கி பத்திரம் செய்தோம். எத்தனையோ ஆண்டுகள் கழிந்தும் எதற்காக என்ற காரணம் மறந்தும் இந்த மெல்லிழை இறுக்கிப் பிணைக்கிறது தொலைதூரம் விலகிச் சென்ற தோழர்களையும்.
தற்செயலாய் வானம் பார்க்க நேர்ந்த மூன்றாம்பிறை நாளில் என்னைக் கண்டதும் தென்னங் கீற்றுகளின் பின்னோடி - மேகத்தில் முகம் மறைத்தபோதுதான் நினைவெழுந்தது 'நிலா பார்த்து நெடுநாளாயிற்று'.