Thursday, October 02, 2008

மனம் காட்டும் கண்ணாடி

சூரியத் துணுக்குகள்
மோத மோத
இசையெழுப்பி
நடக்கும் நதி.

நதியின் இசை
நாணலுக்குத் தாலாட்டு.

தாலாட்டில் கலையாது
தவமிருக்கும் நந்தவனம்.

நந்தவனங்கள் வழியே
உனை அடையும் பாதை.

பாதை எங்கும் பார்த்தேன்
பூவிதழ்களில் கண்ணீர்த் துளி.
நீ பாராமல் நடந்தாயாம்.

நடந்து சென்ற உன்
தோள்களின் மேல்
இரு சிறகுகள் இருந்ததாய்
ஒரு தேவதைக் கற்பனை.

கற்பனையின் கதவுகள்
கண்கள் வழி திறக்கின்றன;
பேனாவின் ஊற்றுக்கண்கள் வழி.

எழுதியபின் பார்த்தேன்.
கற்பனையின் பிம்பங்கள்
காகிதக் கண்ணாடியில்.

நான் மனம் பார்க்கும்
கண்ணாடி நீதான்.
என் மனதைக் காட்ட
என்னையே பூசாதே
பாதரசமாய்.

2 comments:

'))')) said...

வாவ் ...கார்த்திகா..அருமை அருமை பூக்களின் கண்ணீரிலும் உங்கள் 'பாத ரசத்திலும்' நனைந்து திக்குமுக்காடி போயிட்டேன் பா ...one of the best portrayals of yearnings i have ever read :-)

'))')) said...

ஒரு வரியைப் பாராட்டினால்
மற்ற கோபித்துக் கொள்ளுமோ
என்ற அச்சத்தில் சொல்லிவிடிகிறேன்
அனைத்து வரிகளுமே
அருமையிலும் அருமை