Monday, August 15, 2011

பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை

கிளம்பும்போதே ஆச்சி சொன்னாள்- ‘மழைக்கோட்டு எடுத்துட்டுப் போளா…’ என்று. கேட்டேனா நான்’ - லேசாக அலுத்தவாறு சாலையோரத்தில் இருந்த காய் கனிகள் விற்கும் ஹைடெக் கடை வாசலில் வண்டியை நிறுத்தினாள் காயத்ரி. ஓடிச் சென்று படிகளில் ஏறி நின்றுகொண்டாள். மதிய உணவுக்குப் பின் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தாள். மழை குறுக்கிட்டு விட்டது. ஈரக்காற்று சில்லென்று வீசத் தொடங்கியிருந்தது. அண்ணாந்து பார்த்தாள். கருமேகங்களைச் சுற்றி சில்-ஹவுட் சூரியன்.

“ஓரமா நில்லும்மா…” என்றார் கடை செக்யூரிட்டி.

“கடையே ஓரமாதானேங்க இருக்கு…”

லேசாக முறைத்துவிட்டுப் பேசாமல் இருந்தார்.

மழை வலுக்கத்தொடங்கியது. மண் வாசனை மென்மையாக எழுந்தது; இருளில் பரவுகின்ற மெல்லிய நிலவொளி போல. அந்த நிலவொளி எவ்வளவு பிடிக்குமோ, மண் வாசனையும் அவ்வளவு பிடிக்கும் காயத்ரிக்கு.
கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா… எதுவானாலும் சரி… அந்தந்த ஊர்களிலிருந்து மண்ணும், தண்ணீரும் சேகரித்துக் கொண்டு வரும் பழக்கம் அவளுக்கு. ஏதேனும் ஒரு வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உட்கார்ந்து கொண்டு மண் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவேண்டியவள். வேளாண் அறிவியல் படிப்பதில் வீட்டுப் பெரியவர்களுக்கு விருப்பமில்லை. இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வருக்கு அடுத்து ஒரு பெண்ணாழ்வாராக வர வேண்டும் என்ற எண்ணம், வெறும் மண் சேகரிப்போடு முடிந்து போனது. படித்தது கணிணியியல். பணி செய்வது ஒலிப்பெருக்கி உபகரணங்கள் விற்கும் நிறுவனத்தில். லேட்டஸ்ட் கனவு சவுண்ட் இன்ஜினியரிங் படிப்பது. டேர் டெவில். பட் இதயலாஜிக்கல்.

மணி நான்கை நெருங்கி விட்டது. மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. கொஞ்ச நேரம் மழையையே கூர்ந்துகொண்டிருந்தாள். மழையை ஒரு திரை போல் காற்று சுழற்றி சுழற்றி வீசிக் கொண்டிருந்தது. வீட்டில் அரும்பு விட்டிருந்த மல்லிகையும் கனகாம்பரமும் ஞாபகத்துக்கு வந்தன. மழைக்கு எல்லாம் உதிர்ந்திருக்கும்.

இந்த எண்ணம் வந்ததும் தோழி செந்தூர் நினைவும் வந்தது. இருவரிடமும் செல்ஃபோன் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொள்வதில் பித்துப்பிடித்தவர்கள்.

டுத்த வாரம் அறுப்பு’ என்று போன கடிதத்தில் எழுதியிருந்தாள். அவர்கள் காடு இந்த மழையைத் தாங்குமா? திருச்செந்தூர் பக்கம் ஒரு கிராமம். அங்கே நிறைய தோட்டம், காடு கரை இருந்தது அவள் குடும்பத்துக்கு. குடும்பத் தொழிலே விவசாயம்தான். அவள் வீட்டில் ஆணும் பெண்ணுமாக எட்டு குழந்தைகள். காட்டுவேலைகளில் உதவுவார்கள்தான் என்றாலும் வெவ்வேறு படிப்பு முடித்துவிட்டு இந்தச் சூழலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். செந்தூர் கூட இயற்பியலில் பி.எஸ்ஸி முடித்துவிட்டு பி.எட் சேரத்தான் காத்திருக்கிறாள்.

காயத்ரி தன் கலைந்து போன கனவு பற்றி அடிக்கடி ஆதங்கப்படும்போது, தன் வாழ்க்கையையே அக்கக்காக அலசிப் போட்டு அவள் நிறைய கூறியிருக்கிறாள் – “காயூ… காட்டுவேலை எல்லாம் நீ நினைக்கற மாதிரி ஈஸி கிடையாது. இப்போல்லாம் உன்னை மாதிரி சொல்றது ஒரு ஃபேஷனாகிடுச்சு. இப்படி அக்ரி படிச்சுட்டு ஆராய்ச்சி செய்யணும்னு சொல்லிட்டிருக்கியே… அடுத்தவங்க நிலத்துல உன் ஆராய்ச்சியை செஞ்சு காட்டறதுக்குப் பதிலா, நீயே கொஞ்சம் நிலம் வாங்கி உன் படிப்பைப் பயன்படுத்தி உழைக்க ரெடியா இருப்பியா…. சொல்லு…”

“இல்ல செந்தூர்… நான் நிஜமான இன்ட்ரஸ்ட்லதான் சொல்றேன்… உங்க அப்பா என்னைத் தத்தெடுத்துக்குவாங்களான்னு கேட்டுச் சொல்லு… நானும் உன்கூட காட்டுல இறங்கி வேலை செய்யறேன்…”

“ஜோக்கா… கொஞ்சம் ப்ராக்டிக்கலா பேசு…” - தோழி உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்து பேசாமல் இருந்தாள் காயத்ரி.

“மழையை நம்பி விதைச்சா வெயில் கொளுத்தும். கிணறு வத்திடுச்சுன்னா வாய்க்கால் தொறக்கறதுக்கு நடையா நடக்கணும். விதைப்புக்கும், நடவுக்கும், களை பறிப்புக்கும், அறுப்புக்கும்னு காடுதான் வீடுன்னு கிடக்கணும் தெரியுமா… எல்லாம் செஞ்சாலும் எங்க பொருளுக்கு நாங்க வெலை சொல்ல முடியாது. ஒண்ணும் வேண்டாம்னு காய்கறித் தோட்டம் போட்டா இப்போ அது விக்கறதுக்கும் போட்டி. உழவர் சந்தைன்னு வைச்சாங்க… அங்கேயும் அவங்க சொல்ற விலைதான். நாங்க ஃப்ரெஷ்ஷா கொண்டு போய் வெச்சுட்டுக் காத்திருந்தா, போர்ட்ல எழுதிப்போட்டிருக்கிற வெலைய நோட் செஞ்சு வெச்சுக்கிட்டு வந்து வெரிஃபை செஞ்சு வாங்கறவங்க இருக்காங்க தெரியுமா..? ஆனா வாடிப்போன காய்கறிகளை அடுக்கி வைச்சு லைட்டெல்லாம் போட்டு ஷோ காட்டினா போதும்; ரெண்டு மடங்கு வெலை கொடுத்துக்கூட வாங்குவாங்க. அம்பானிங்க கூடல்லாம் நாம போட்டி போட முடியுமா சொல்லு… அதெல்லாம் விடு… எங்க காட்டுல பயிரை நாசம் பண்ற எலிங்களைப் பிடிச்சு சாப்பிடுவோம் நாங்க… ஆனா பயிர் வைக்க ஏலாதவங்க எத்தனையோ பேர் எலிக்கறி சாப்பிட்டுச் செத்துப் போயிருக்காங்க… நீயே படிச்சிருப்பியே பேப்பர்ல… சாப்பாட்டுக்கே உத்தரவாதம் இல்லாம போயிட்ட இந்தத் தொழிலை இனிமேலும் எப்படி நம்பிக்கிட்டிருக்கிறது சொல்லு” –
பல சந்தர்ப்பங்களில் முட்டி மோதும் அவர்கள் விவாதங்களில் செந்தூரிடம் காயும் கனல் சொற்கள். அவற்றின் நியாய அநியாயங்கள் அதற்கு என்ன தீர்வு… இதெல்லாம் சிந்தனையில் தோன்றாது; தோழியை அமைதிப்படுத்தும் எண்ணத்துக்கு முன்னால்.

இந்த நினைவு தோன்றியதும் அந்தக் காய்கனி கடையைத் திரும்பிப் பார்த்தாள். வெவ்வேறு நிறக் கூடை போன்ற பெட்டிகளில் காய்கறிகளும், பழங்களும் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு கூடையிலும் பெயரும், விலையும் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. தள்ளுவண்டியைத் தள்ளியபடி ஓரிருவர். வெளியே வாடிக்கையாளர்களின் உடைமைகளையும், பைகளையும் கண்டிப்பாக வைத்தே செல்ல வேண்டிய பெட்டகம் ஒன்று உயரமாக நின்றது. விற்பனை தவிர, உணர்வுகளுக்கு இங்கே இடமே கிடையாது. அதற்காக சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்குக் கூடப் பொருள் கிடையாதா?

கால் கிலோ கத்திரிக்காய் வாங்கிவிட்டு, “ரெண்டு இணுக்கு கறிவேப்பிலை கொடேம்மா…” என்று கேட்க முடியாது. “வீட்டுல பிள்ளைக்கு நாய் கடிச்சிருக்காமே… தக்காளி வாங்கிட்டுப் போகாதேம்மா…” என்று சொல்கிற விற்பனையாளரும் கிடையாது. பணம், பொருள் எல்லாம் பயன்பாட்டின் எளிமைக்காகத்தான்; அவை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது போன்ற தத்துவ விசாரங்களுக்கு இங்கே இடமில்லை.

ழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. லேசான தூறல்தான்! போய்விடலாம்.

ஹெல்மெட்டை மாட்டிக்கொள்வதற்கு முன், “தேங்க் யூ சார்” என்று செக்யூரிட்டியைப் பார்த்து சல்யூட் வைத்தாள். செக்யூரிட்டி புன்னகையை மறைக்க முயற்சித்தார்.

லுவலக வாசலில் வண்டியைப் பூட்டிவிட்டு, ஹெல்மெட்டும் கையுமாக நுழைந்தாள்.

“என்ன தாயி சாப்பிட்டியா…?” என்றார் அந்தத் தாத்தா. இவர் இன்னுமா இங்கேயே இருக்கிறார்?

“ஆங்… சாப்பிட்டேன் தாத்தா… நீங்க..?” என்று கேட்டவாறு லாவண்டர் நிற சுரிதாரை கொஞ்சம் உதறிவிட்டாள். வெண்ணிற துப்பட்டாவிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

“நான் சாப்பிடறது கிடக்கட்டும் தாயி… நீ கொஞ்சம் நின்னு வரக்கூடாதா… இப்படி நனைஞ்சுட்டியே…”

ஒலிப்பெருக்கி உபகரணங்கள் வேண்டுமென்று காலையிலேயே வந்தவர், முதலாளியைப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவேன் என்று விடாப்பிடியாகக் காத்திருந்தார். அடம்பிடித்துக் காத்திருக்கும் இவரைச் சமாளிக்க வழி தெரியாமல் மற்ற ஊழியர்கள் தத்தம் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவரைக் கவனித்தாள் காயத்ரி. கருத்த நிறம்; சுருக்கம் விழ ஆரம்பித்திருந்த தோலில் அதிகமாக மினுங்கியது. தும்பைப் பூ கற்றை கொஞ்சம் நெற்றியில் துவண்டு தொங்கியது. உறுதியான பற்கள். கையில்லாத சட்டை, பழுப்பேறிய வேட்டி, அதே நிறத்தில் – அதுதான் நிறமா? - தோள் துண்டும் அணிந்திருந்தார்.

“தாத்தா… முதலாளி வர நேரமாகும் போல இருக்கு… ஃபோன் போட்டுத் தாரேன்… பேசுதீங்களா..?”

“பரவாயில்லைம்மா… ஆனது ஆச்சு… இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பாத்துக்கிடுதேன்… இந்தப் பய இந்தா டீ குடிச்சுட்டு வந்துடுதேன்ட்டுப் போனான். இன்னும் ஆளைக் காணலை…”

“அது உங்க மகனா தாத்தா…?”

“ஆமாம்மா… அவனுக்குத்தான் மைக் செட் வெச்சுக் கொடுக்கலாம்னுட்டு ஒரு யோசனை.”

“எந்த ஊர் தாத்தா உங்களுக்கு..?”

“உங்க முதலாளி ஊர்தான் எனக்கும்… சாத்தாங்குளம்… அவருக்க தாத்தா கூட ரொம்ப சிநேகிதம்…”

இப்போது இருப்பது அந்தத் தாத்தாவுடைய பேரன். இவர் யாரை நினைத்துக் காத்திருக்கிறாரோ?

“அவருக்க குடும்பத்துப் பேரே சிலோன் செட்டியார் குடும்பம்னு இருந்தது அந்தக் காலத்துல. மக்கல்லாம் பெரிசானதும் இந்த ஊருக்கு வந்துட்டாக…”

“நீங்களும் சிலோன்ல இருந்திருக்கீங்களா..?”

“இல்லம்மா… சொந்தமா கொஞ்சம் காடு இருக்கு… அதை வைச்சு இவ்வளவு நாள் பாத்துக்கிட்டிருந்தேன். பயலுக்க போக்கைப் பாத்தா காட்டைக் கவனிச்சுக்க மாட்டான் போல இருக்கு. பாதி நிலத்தை வித்தாச்சு; இவனுக்க படிப்புக்கும், இவன் தங்கச்சிக்க படிப்புக்கும். பொட்டப்புள்ள இப்போ காலேச்சுல படிக்கி. இவனானா ஒரு வழிக்கும் வரமாட்டேங்கான். பெலராட்டு மாதிரி ஊரைச் சுத்திக்கிட்டு வாரான். சேத்திக்காரனோட தேரிக்காட்டுல பதநி இறக்கப் போறேன்னு போறான்; கருப்பட்டி காய்க்கப் போறேன்னு போறான். இருந்தாக்கல வியாபாரத்துக்குன்னு தெசையன்வெளைக்கும், உடங்குடிக்கும், எடைச்சிவெளைக்கும்னுட்டு வண்டியை எடுத்துக்கிட்டு போறானுவ, வாரானுவ. இவனுக்க போக்கு ஒண்ணும் எனக்குச் சரியாப் படல… இவ்வளவு நாளும் நாமளே நிலத்துல கிடந்து உழன்டாச்சு. ஒண்ணும் மிஞ்சல.”

“உழுதவன் கணக்குக்கு உழக்கு கூட மிஞ்சாதும்பாகளே… சும்மாவா அண்ணாச்சி..” என்றார் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆறுமுகம்.

“அதுக்க அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..?”

“உழக்கு நெல் கூட உழைச்சவனுக்கு மிஞ்சாது. அதானே..?”

“இப்போ உழக்கே மிஞ்சாதுன்னு ஆகிப்போச்சு…”

தனக்குத் தானே சொல்வது போல் சொல்லிவிட்டு, பெருமூச்சு விட்டார். சற்றுநேர மௌனம்.

“கருக்குவேல் அய்யனார் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படறவனுக்க ரத்தத்த எங்க ஊர் மண்ணுல தொளிக்கச் சொல்லிக் கேட்டாரும்பாக. இப்போ அவரும்லா கல்லாயிட்டாரு போலிருக்கு. இல்லேன்னா எங்க உழைப்ப உறிஞ்சுறவங்களுக்க ரத்தத்த விட்டுவெச்சிருப்பாரா…?” – சாமியாடி அரற்றுவது போல் இருந்தது.

“வருத்தப்படாதீய அண்ணாச்சி… இந்தா… முதலாளி வந்துட்டாக… இருநூத்தம்பது வாட்ஸ் ஆம்ப்ளிஃபயர் எடுத்து செக் பண்ணிடட்டுமா..?”

“நல்லா செக் பண்ணி செட்டா கொடுத்துடுங்கய்யா…”

“என்னம்மா… என்ன சேல்..?” என்றவாறு நுழைந்தார் முதலாளி.

“சார்… உங்க ஊர்க்காரங்களாம் இவங்க. உங்களைப் பார்த்துட்டுத்தான் வாங்கணும்னு காலையில இருந்து வெய்ட் பண்றாங்க…”

“வாங்கய்யா… என்ன வேணும்..?”

“மைக் செட் வாங்கலான்னுட்டு வந்தோம். உங்க தாத்தால்லாம் ரொம்பப் பழக்கம். அதான் நம்ம கடைக்கே வந்திருக்கோம். நம்ம பையன்தான் ஆரம்பிக்கான். கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுங்க…”

“அப்படியா… ரொம்ப சந்தோஷம். அம்மா… காயத்ரி… எங்க ஊர்க்காரங்க…. பத்து பெர்சன்ட் டிஸ்கவுன்ட் வெச்சுக் கொடுத்துடு… அய்யா… சொல்லி இருக்கேன்… செக் பண்ணி வாங்கிக்கோங்க…”

அவர் செக்கிங் டேபிள் பக்கம் போக, தீர்மானமில்லாமல் தலையாட்டி விட்டு நகர்ந்தாள் காயத்ரி.

“தாத்தா… பில் என்ன பேருல போடணும்…?”

“ம்ம்…. தங்கைய்யான்னு போடும்மா… இல்ல வேண்டாம்… கருக்குவேல் அய்யனார் சவுண்ட் சர்வீஸ்னு போடு தாயி… அப்புறம் பில் போடுகதுக்கு முன்னாடி இந்தப் பணத்தக் கொஞ்சம் எண்ணிடு…”

செம்மண் ஒட்டிய மூன்று பாலிதீன் பைகளை எடுத்து மேஜை மேல் வைத்தார். உள்ளே பத்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகள். சில்லறைகள் கூட இருந்தன.

“ரெண்டு மூணு வருஷமா காட்டுல எந்த வேலையும் நடக்கலை. இது வரைக்கும் தொழிலே அந்த நிலத்தை வெச்சுதானே நடந்தது. அதான் புதுத் தொழிலுக்குன்னு எடுத்து வைக்கற பணத்தை அந்த மண்ணுலயே சேத்துவெச்சிருந்தோம். அதான் கொஞ்சம் மண்ணாயிருக்கு… எண்ணிப் பாத்துட்டு இன்னும் எவ்வளவு தரணும்னு சொல்லும்மா…”

பாலிதீன் பைகளைப் பிரித்தாள். பணத்தை ஒட்டியிருந்த மண் துகள்களை உதறிவிட்டு எண்ணினாள்.

“பனிரெண்டாயிரத்து எண்ணூத்தி நாப்பத்தெட்டு ரூபா இருக்கு… இன்னும் ஐநூத்தி அம்பத்திரெண்டு ரூபா கொடுங்க…”

சட்டைப் பையிலிருந்து எண்ணிக் கொடுத்தார்; இரண்டு ரூபாய் சில்லறை உட்பட.

முதலாளியிடம் சென்றார்.

“ஐயா… உங்க கையால எடுத்துக் கொடுங்க…”

முதலாளி ஆம்ப்ளிஃபயரைத் தூக்கி சாமி படத்துக்கு முன்னால் வைத்து ஓரிரு நிமிடங்கள் வணங்கிவிட்டு, பெரியவரிடம் நீட்டினார்.

“மகளைக் கூட்டி வராம போனேனே…” என்று தயங்கியவர், “தாயி… கொஞ்சம் இதுல கை வெச்சுக் குடு…” என்று காயத்ரியை அழைத்தார். அட்டைப் பெட்டியில் காயத்ரி இரு கரங்களையும் வைக்க, திரும்பி வந்துவிட்டிருந்த தம் பையனை அழைத்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் தம்பி… நாங்க போய்ட்டு வாரோம்… போய்ட்டு வாரோம் தாயி…”

“சரிங்க…” – வணக்கம் வைத்தார் முதலாளி.

பாவம் சார்… யார்ன்னு தெரியாதவங்களுக்குக் கூட நார்மலா ஃபிஃப்ட்டீன் பெர்சென்ட் டிஸ்கவுன்ட் கொடுக்கோம். இவரு ஒரு பழக்கத்துக்காக இங்க வந்து வாங்கறார். இன்னும் கொஞ்சம் டிஸ்கவுன்ட் கொடுத்திருக்கலாம் சார்…” – அவர்கள் நகர்ந்ததும் மெதுவான குரலில் கேட்டாள் காயத்ரி.

“இப்போதானேம்மா இவரு முதமுதல்லா வாங்குறாரு… டிஸ்கவுன்ட் பத்தில்லாம் அவருக்கு ஒண்ணும் தெரியாதும்மா… இவருகிட்டல்லாம் அடிச்சு விக்கலாம். நீ இன்னும் பிஸினஸ் ட்ரிக்லாம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு… சரியா..?”

காயத்ரி தன் இருக்கைக்குத் திரும்பினாள். மேஜை ஓரத்தில் ஒதுங்கியிருந்த சிறிய மண்குவியல் கண்ணில் பட்டது. ஒரு ஸிப்பர் பேக்கைத் தேடி எடுத்தாள். அந்த மண்ணை ஒரு தூசி விடாமல் அந்தப் பையில் வாரிக்கொண்டாள்.

ப்போதாவது மண் வாசனையை நுகரத் தோன்றுகையில் இப்போதெல்லாம் அந்தப் பையைத்தான் பிரித்துப் பார்க்கிறாள். மழை நேரத்து மண் வாசத்தை விட அந்த ஸிப்பர் பேக் மண் வாசம்தான் அவளுக்கு இப்போது விருப்பமானதாகிவிட்டது. அவளுடைய மண் சேகரிப்பில் கடைசியாக இடம் பெற்றதும் அந்த ஸிப்பர் பேக்தான். •

(c) karthikaneya@gmail.com

5 comments:

'))')) said...

மனசை தொட்ட கதை.... இல்லை வாழ்க்கை. உழவனின் ..இல்லை ... எனது பழைய வாழ்க்கை நினைவு படுத்தியது

Anonymous said...

Congrats, Karthi
I wish you all the best for all your future creations.

Vidhya

'))')) said...

வாழ்த்துக்கள். ரொம்ப மனசை தொடும் யதார்த்தம். உங்கள் வழக்கு மொழி அழகு.

'))')) said...

வாழ்த்துக்கள்.அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

'))')) said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News