Tuesday, October 13, 2009

வட்ட வட்டக் கனவு

பிரியமுள்ள பெண்மணிக்கு
பீங்கான் வளைகளோடு
பரிசளித்தேன் ஒரு புன்னகையை.
பெரிதாயிருப்பதாக அவர்
குறையின்றிச் சொன்ன நாளில்,
தோள் வரைக்கும் சென்ற வளைகள்
நானாக மாறி தனைக் கொஞ்சும்
கனவொன்றை அவர் கண்டிருக்கக்கூடும்.

பிறிதொரு நாள்
மீளக் கிடைத்த பரிசுகளில்
புன்னகைத்துக் கொண்டிருந்தன
பீங்கான் வளைகள்.
மணிக்கட்டை மீறாத வளைகளை
உடையாமல் அணிந்துகொண்ட அவ்விரவில்
ஒரு குழந்தையாக மாறி
அவர் தோள்களில் தவழ்ந்த
கனவினின்று விழித்தெழுந்தேன்

வட்ட வட்டமாகத்
தீர்ந்து கொண்டிருக்கிறது
அவ்விரவு மெதுவாக.

(C) karthikaneya@gmail.com

7 comments:

'))')) said...

கவிதை வாசித்த இன்றிரவு எனக்கும் வரக்கூடும் வளை மழை பொழியும் கனவு. அருமையா இருக்கு குட்டிம்மா.

'))')) said...

//தோள் வரைக்கும் சென்ற வளைகள்
நானாக மாறி தனைக் கொஞ்சும்
கனவொன்றை அவர் கண்டிருக்கக்கூடும். //

அழகான கற்பனை. வாழ்த்துகள் கார்த்திகா :)

'))')) said...

பீங்கான் வளைகளோடு ஒரு புன்னகையா? அப்படின்னா? புதுசா புதுசா சொல்ல்றீங்களே!!

நீங்க எழுதற நிறைய கவிதைகள புரிவதில்லை. அதனால் முழுசா ரசிக்க முடியவில்லை. ஸோ கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் :-)

'))')) said...

அழகிய சொல்லாடல்..... வாழ்த்துகள்......

'))')) said...

//பிறிதொரு நாள் மீளக் கிடைத்த பரிசுகளில்புன்னகைத்துக் கொண்டிருந்தன பீங்கான் வளைகள். மணிக்கட்டை மீறாத வளைகளைஉடையாமல் அணிந்துகொண்ட அவ்விரவில் ஒரு குழந்தையாக மாறி அவர் தோள்களில் தவழ்ந்த //

சூப்ப‌ர்...

இப்ப‌டி கூட‌ யோசிக்க‌ முடியுதேங்க‌...

//வட்ட வட்டமாகத் தீர்ந்து கொண்டிருக்கிறது அவ்விரவு மெதுவாக.//

விடிய‌லை நோக்கி ந‌கர்ந்து கொண்டிருக்கும் அந்த‌ இர‌வின் வ‌ர்ண‌னை அச‌த்த‌ல்...

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ கார்த்திகா... வாழ்த்துக்க‌ள்.. நேர‌மிருப்பின் என் தீபாவளி வாழ்த்தை இங்கு வந்து பார்க்க‌வும்...

www.edakumadaku.blogspot.com

வேறு பல விஷயங்களை உள்ளடக்கிய என் மற்றொரு வலைப்பக்கம் இதோ...

www.jokkiri.blogspot.com

'))')) said...

அருமை வாழ்த்துக்கள்

'))')) said...

very nice