Tuesday, October 13, 2009

தேவதைகளின் மொழி

அந்த ஆறு வயது
இரயில்சிநேகனின் மொழி
இரகசியமானது
வார்த்தைகளைப் பரிமாறும் பயிற்சிக்கு
சென்று வருகிறான் அன்றாடம்.
என்றாலும் தீர்ந்ததில்லை அவன்
உரையாடல் எந்நாளும்.

முகம் திருப்பிக்கொள்வான்
முத்தமிட்டு மயக்கிடுவான்
தலை சாய்த்துப் புன்னகைப்பான்
தாய் மடியில் முகம்புதைப்பான்
உதடுகளை மடித்துவைத்து
'உம்'மென்று அமர்ந்திருப்பான்

அவன் மொழியோ
வசீகரமானது
வழக்குக்கு மிக மிகப் புதிது
தேவதைகளின் உலகில்
பயன்பாட்டில் இருக்கக்கூடும்

வார்த்தைகளை ஒளித்து வைத்து
கண்ணாமூச்சி ஆடும் அவன்
அசைவுகளின் அர்த்தங்கள்
மெல்ல மெல்ல அறிந்த பின்னும்
நிறம் மங்கிய மாலைகளில்
ஒவ்வொரு நாளும்
விடைபெற்றுச் செல்கையில் - அவன்
கையசைப்பில் உதிர்ந்துகொண்டுள்ளன
பரிச்சயமாகாத - இன்னும்
பலவண்ணச் சொற்கள்.

(c) karthikaneya@gmail.com

3 comments:

'))')) said...

குழந்தைகளின் உலகமே தேவதைகளின் உலகம்தானே. நல்ல கவிதை.

'))')) said...

வாவ். இந்த கவிதை ரொம்ப ரசித்தேன்.

\\அந்த ஆறு வயது
இரயில்சிநேகனின் மொழி இரகசியமானது \\
ஒரு சந்தேகம். சிநேகிதன் கேள்விப் பட்டிருக்கேன். அதென்ன சிநேகன்!!!

'))')) said...

கவிதை செய்ய நீங்கள் கைக்கொள்ளும் பொருள்கள் குறித்து வியப்பு மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை...... மிக அழகான பார்வை தங்களுடையது..., தொடர்ந்து எழுதுங்கள்......