Monday, August 15, 2011

பாலை - கல்கி நினைவு சிறுகதைப் போட்டி(2011)யில் இரண்டாம் பரிசு பெற்ற எனது சிறுகதை

கிளம்பும்போதே ஆச்சி சொன்னாள்- ‘மழைக்கோட்டு எடுத்துட்டுப் போளா…’ என்று. கேட்டேனா நான்’ - லேசாக அலுத்தவாறு சாலையோரத்தில் இருந்த காய் கனிகள் விற்கும் ஹைடெக் கடை வாசலில் வண்டியை நிறுத்தினாள் காயத்ரி. ஓடிச் சென்று படிகளில் ஏறி நின்றுகொண்டாள். மதிய உணவுக்குப் பின் அலுவலகம் திரும்பிக் கொண்டிருந்தாள். மழை குறுக்கிட்டு விட்டது. ஈரக்காற்று சில்லென்று வீசத் தொடங்கியிருந்தது. அண்ணாந்து பார்த்தாள். கருமேகங்களைச் சுற்றி சில்-ஹவுட் சூரியன்.

“ஓரமா நில்லும்மா…” என்றார் கடை செக்யூரிட்டி.

“கடையே ஓரமாதானேங்க இருக்கு…”

லேசாக முறைத்துவிட்டுப் பேசாமல் இருந்தார்.

மழை வலுக்கத்தொடங்கியது. மண் வாசனை மென்மையாக எழுந்தது; இருளில் பரவுகின்ற மெல்லிய நிலவொளி போல. அந்த நிலவொளி எவ்வளவு பிடிக்குமோ, மண் வாசனையும் அவ்வளவு பிடிக்கும் காயத்ரிக்கு.
கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா… எதுவானாலும் சரி… அந்தந்த ஊர்களிலிருந்து மண்ணும், தண்ணீரும் சேகரித்துக் கொண்டு வரும் பழக்கம் அவளுக்கு. ஏதேனும் ஒரு வேளாண் ஆராய்ச்சி மையத்தில் உட்கார்ந்து கொண்டு மண் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கவேண்டியவள். வேளாண் அறிவியல் படிப்பதில் வீட்டுப் பெரியவர்களுக்கு விருப்பமில்லை. இயற்கை வேளாண்மையில் நம்மாழ்வருக்கு அடுத்து ஒரு பெண்ணாழ்வாராக வர வேண்டும் என்ற எண்ணம், வெறும் மண் சேகரிப்போடு முடிந்து போனது. படித்தது கணிணியியல். பணி செய்வது ஒலிப்பெருக்கி உபகரணங்கள் விற்கும் நிறுவனத்தில். லேட்டஸ்ட் கனவு சவுண்ட் இன்ஜினியரிங் படிப்பது. டேர் டெவில். பட் இதயலாஜிக்கல்.

மணி நான்கை நெருங்கி விட்டது. மழை அடித்துப் பெய்யத் தொடங்கியது. கொஞ்ச நேரம் மழையையே கூர்ந்துகொண்டிருந்தாள். மழையை ஒரு திரை போல் காற்று சுழற்றி சுழற்றி வீசிக் கொண்டிருந்தது. வீட்டில் அரும்பு விட்டிருந்த மல்லிகையும் கனகாம்பரமும் ஞாபகத்துக்கு வந்தன. மழைக்கு எல்லாம் உதிர்ந்திருக்கும்.

இந்த எண்ணம் வந்ததும் தோழி செந்தூர் நினைவும் வந்தது. இருவரிடமும் செல்ஃபோன் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொள்வதில் பித்துப்பிடித்தவர்கள்.

டுத்த வாரம் அறுப்பு’ என்று போன கடிதத்தில் எழுதியிருந்தாள். அவர்கள் காடு இந்த மழையைத் தாங்குமா? திருச்செந்தூர் பக்கம் ஒரு கிராமம். அங்கே நிறைய தோட்டம், காடு கரை இருந்தது அவள் குடும்பத்துக்கு. குடும்பத் தொழிலே விவசாயம்தான். அவள் வீட்டில் ஆணும் பெண்ணுமாக எட்டு குழந்தைகள். காட்டுவேலைகளில் உதவுவார்கள்தான் என்றாலும் வெவ்வேறு படிப்பு முடித்துவிட்டு இந்தச் சூழலை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணமும். செந்தூர் கூட இயற்பியலில் பி.எஸ்ஸி முடித்துவிட்டு பி.எட் சேரத்தான் காத்திருக்கிறாள்.

காயத்ரி தன் கலைந்து போன கனவு பற்றி அடிக்கடி ஆதங்கப்படும்போது, தன் வாழ்க்கையையே அக்கக்காக அலசிப் போட்டு அவள் நிறைய கூறியிருக்கிறாள் – “காயூ… காட்டுவேலை எல்லாம் நீ நினைக்கற மாதிரி ஈஸி கிடையாது. இப்போல்லாம் உன்னை மாதிரி சொல்றது ஒரு ஃபேஷனாகிடுச்சு. இப்படி அக்ரி படிச்சுட்டு ஆராய்ச்சி செய்யணும்னு சொல்லிட்டிருக்கியே… அடுத்தவங்க நிலத்துல உன் ஆராய்ச்சியை செஞ்சு காட்டறதுக்குப் பதிலா, நீயே கொஞ்சம் நிலம் வாங்கி உன் படிப்பைப் பயன்படுத்தி உழைக்க ரெடியா இருப்பியா…. சொல்லு…”

“இல்ல செந்தூர்… நான் நிஜமான இன்ட்ரஸ்ட்லதான் சொல்றேன்… உங்க அப்பா என்னைத் தத்தெடுத்துக்குவாங்களான்னு கேட்டுச் சொல்லு… நானும் உன்கூட காட்டுல இறங்கி வேலை செய்யறேன்…”

“ஜோக்கா… கொஞ்சம் ப்ராக்டிக்கலா பேசு…” - தோழி உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்து பேசாமல் இருந்தாள் காயத்ரி.

“மழையை நம்பி விதைச்சா வெயில் கொளுத்தும். கிணறு வத்திடுச்சுன்னா வாய்க்கால் தொறக்கறதுக்கு நடையா நடக்கணும். விதைப்புக்கும், நடவுக்கும், களை பறிப்புக்கும், அறுப்புக்கும்னு காடுதான் வீடுன்னு கிடக்கணும் தெரியுமா… எல்லாம் செஞ்சாலும் எங்க பொருளுக்கு நாங்க வெலை சொல்ல முடியாது. ஒண்ணும் வேண்டாம்னு காய்கறித் தோட்டம் போட்டா இப்போ அது விக்கறதுக்கும் போட்டி. உழவர் சந்தைன்னு வைச்சாங்க… அங்கேயும் அவங்க சொல்ற விலைதான். நாங்க ஃப்ரெஷ்ஷா கொண்டு போய் வெச்சுட்டுக் காத்திருந்தா, போர்ட்ல எழுதிப்போட்டிருக்கிற வெலைய நோட் செஞ்சு வெச்சுக்கிட்டு வந்து வெரிஃபை செஞ்சு வாங்கறவங்க இருக்காங்க தெரியுமா..? ஆனா வாடிப்போன காய்கறிகளை அடுக்கி வைச்சு லைட்டெல்லாம் போட்டு ஷோ காட்டினா போதும்; ரெண்டு மடங்கு வெலை கொடுத்துக்கூட வாங்குவாங்க. அம்பானிங்க கூடல்லாம் நாம போட்டி போட முடியுமா சொல்லு… அதெல்லாம் விடு… எங்க காட்டுல பயிரை நாசம் பண்ற எலிங்களைப் பிடிச்சு சாப்பிடுவோம் நாங்க… ஆனா பயிர் வைக்க ஏலாதவங்க எத்தனையோ பேர் எலிக்கறி சாப்பிட்டுச் செத்துப் போயிருக்காங்க… நீயே படிச்சிருப்பியே பேப்பர்ல… சாப்பாட்டுக்கே உத்தரவாதம் இல்லாம போயிட்ட இந்தத் தொழிலை இனிமேலும் எப்படி நம்பிக்கிட்டிருக்கிறது சொல்லு” –
பல சந்தர்ப்பங்களில் முட்டி மோதும் அவர்கள் விவாதங்களில் செந்தூரிடம் காயும் கனல் சொற்கள். அவற்றின் நியாய அநியாயங்கள் அதற்கு என்ன தீர்வு… இதெல்லாம் சிந்தனையில் தோன்றாது; தோழியை அமைதிப்படுத்தும் எண்ணத்துக்கு முன்னால்.

இந்த நினைவு தோன்றியதும் அந்தக் காய்கனி கடையைத் திரும்பிப் பார்த்தாள். வெவ்வேறு நிறக் கூடை போன்ற பெட்டிகளில் காய்கறிகளும், பழங்களும் அணிவகுத்து நின்றன. ஒவ்வொரு கூடையிலும் பெயரும், விலையும் எழுதி ஒட்டப்பட்டிருந்தன. தள்ளுவண்டியைத் தள்ளியபடி ஓரிருவர். வெளியே வாடிக்கையாளர்களின் உடைமைகளையும், பைகளையும் கண்டிப்பாக வைத்தே செல்ல வேண்டிய பெட்டகம் ஒன்று உயரமாக நின்றது. விற்பனை தவிர, உணர்வுகளுக்கு இங்கே இடமே கிடையாது. அதற்காக சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்குக் கூடப் பொருள் கிடையாதா?

கால் கிலோ கத்திரிக்காய் வாங்கிவிட்டு, “ரெண்டு இணுக்கு கறிவேப்பிலை கொடேம்மா…” என்று கேட்க முடியாது. “வீட்டுல பிள்ளைக்கு நாய் கடிச்சிருக்காமே… தக்காளி வாங்கிட்டுப் போகாதேம்மா…” என்று சொல்கிற விற்பனையாளரும் கிடையாது. பணம், பொருள் எல்லாம் பயன்பாட்டின் எளிமைக்காகத்தான்; அவை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது போன்ற தத்துவ விசாரங்களுக்கு இங்கே இடமில்லை.

ழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. லேசான தூறல்தான்! போய்விடலாம்.

ஹெல்மெட்டை மாட்டிக்கொள்வதற்கு முன், “தேங்க் யூ சார்” என்று செக்யூரிட்டியைப் பார்த்து சல்யூட் வைத்தாள். செக்யூரிட்டி புன்னகையை மறைக்க முயற்சித்தார்.

லுவலக வாசலில் வண்டியைப் பூட்டிவிட்டு, ஹெல்மெட்டும் கையுமாக நுழைந்தாள்.

“என்ன தாயி சாப்பிட்டியா…?” என்றார் அந்தத் தாத்தா. இவர் இன்னுமா இங்கேயே இருக்கிறார்?

“ஆங்… சாப்பிட்டேன் தாத்தா… நீங்க..?” என்று கேட்டவாறு லாவண்டர் நிற சுரிதாரை கொஞ்சம் உதறிவிட்டாள். வெண்ணிற துப்பட்டாவிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது.

“நான் சாப்பிடறது கிடக்கட்டும் தாயி… நீ கொஞ்சம் நின்னு வரக்கூடாதா… இப்படி நனைஞ்சுட்டியே…”

ஒலிப்பெருக்கி உபகரணங்கள் வேண்டுமென்று காலையிலேயே வந்தவர், முதலாளியைப் பார்த்துவிட்டுத்தான் வாங்குவேன் என்று விடாப்பிடியாகக் காத்திருந்தார். அடம்பிடித்துக் காத்திருக்கும் இவரைச் சமாளிக்க வழி தெரியாமல் மற்ற ஊழியர்கள் தத்தம் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.
அவரைக் கவனித்தாள் காயத்ரி. கருத்த நிறம்; சுருக்கம் விழ ஆரம்பித்திருந்த தோலில் அதிகமாக மினுங்கியது. தும்பைப் பூ கற்றை கொஞ்சம் நெற்றியில் துவண்டு தொங்கியது. உறுதியான பற்கள். கையில்லாத சட்டை, பழுப்பேறிய வேட்டி, அதே நிறத்தில் – அதுதான் நிறமா? - தோள் துண்டும் அணிந்திருந்தார்.

“தாத்தா… முதலாளி வர நேரமாகும் போல இருக்கு… ஃபோன் போட்டுத் தாரேன்… பேசுதீங்களா..?”

“பரவாயில்லைம்மா… ஆனது ஆச்சு… இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பாத்துக்கிடுதேன்… இந்தப் பய இந்தா டீ குடிச்சுட்டு வந்துடுதேன்ட்டுப் போனான். இன்னும் ஆளைக் காணலை…”

“அது உங்க மகனா தாத்தா…?”

“ஆமாம்மா… அவனுக்குத்தான் மைக் செட் வெச்சுக் கொடுக்கலாம்னுட்டு ஒரு யோசனை.”

“எந்த ஊர் தாத்தா உங்களுக்கு..?”

“உங்க முதலாளி ஊர்தான் எனக்கும்… சாத்தாங்குளம்… அவருக்க தாத்தா கூட ரொம்ப சிநேகிதம்…”

இப்போது இருப்பது அந்தத் தாத்தாவுடைய பேரன். இவர் யாரை நினைத்துக் காத்திருக்கிறாரோ?

“அவருக்க குடும்பத்துப் பேரே சிலோன் செட்டியார் குடும்பம்னு இருந்தது அந்தக் காலத்துல. மக்கல்லாம் பெரிசானதும் இந்த ஊருக்கு வந்துட்டாக…”

“நீங்களும் சிலோன்ல இருந்திருக்கீங்களா..?”

“இல்லம்மா… சொந்தமா கொஞ்சம் காடு இருக்கு… அதை வைச்சு இவ்வளவு நாள் பாத்துக்கிட்டிருந்தேன். பயலுக்க போக்கைப் பாத்தா காட்டைக் கவனிச்சுக்க மாட்டான் போல இருக்கு. பாதி நிலத்தை வித்தாச்சு; இவனுக்க படிப்புக்கும், இவன் தங்கச்சிக்க படிப்புக்கும். பொட்டப்புள்ள இப்போ காலேச்சுல படிக்கி. இவனானா ஒரு வழிக்கும் வரமாட்டேங்கான். பெலராட்டு மாதிரி ஊரைச் சுத்திக்கிட்டு வாரான். சேத்திக்காரனோட தேரிக்காட்டுல பதநி இறக்கப் போறேன்னு போறான்; கருப்பட்டி காய்க்கப் போறேன்னு போறான். இருந்தாக்கல வியாபாரத்துக்குன்னு தெசையன்வெளைக்கும், உடங்குடிக்கும், எடைச்சிவெளைக்கும்னுட்டு வண்டியை எடுத்துக்கிட்டு போறானுவ, வாரானுவ. இவனுக்க போக்கு ஒண்ணும் எனக்குச் சரியாப் படல… இவ்வளவு நாளும் நாமளே நிலத்துல கிடந்து உழன்டாச்சு. ஒண்ணும் மிஞ்சல.”

“உழுதவன் கணக்குக்கு உழக்கு கூட மிஞ்சாதும்பாகளே… சும்மாவா அண்ணாச்சி..” என்றார் அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆறுமுகம்.

“அதுக்க அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..?”

“உழக்கு நெல் கூட உழைச்சவனுக்கு மிஞ்சாது. அதானே..?”

“இப்போ உழக்கே மிஞ்சாதுன்னு ஆகிப்போச்சு…”

தனக்குத் தானே சொல்வது போல் சொல்லிவிட்டு, பெருமூச்சு விட்டார். சற்றுநேர மௌனம்.

“கருக்குவேல் அய்யனார் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படறவனுக்க ரத்தத்த எங்க ஊர் மண்ணுல தொளிக்கச் சொல்லிக் கேட்டாரும்பாக. இப்போ அவரும்லா கல்லாயிட்டாரு போலிருக்கு. இல்லேன்னா எங்க உழைப்ப உறிஞ்சுறவங்களுக்க ரத்தத்த விட்டுவெச்சிருப்பாரா…?” – சாமியாடி அரற்றுவது போல் இருந்தது.

“வருத்தப்படாதீய அண்ணாச்சி… இந்தா… முதலாளி வந்துட்டாக… இருநூத்தம்பது வாட்ஸ் ஆம்ப்ளிஃபயர் எடுத்து செக் பண்ணிடட்டுமா..?”

“நல்லா செக் பண்ணி செட்டா கொடுத்துடுங்கய்யா…”

“என்னம்மா… என்ன சேல்..?” என்றவாறு நுழைந்தார் முதலாளி.

“சார்… உங்க ஊர்க்காரங்களாம் இவங்க. உங்களைப் பார்த்துட்டுத்தான் வாங்கணும்னு காலையில இருந்து வெய்ட் பண்றாங்க…”

“வாங்கய்யா… என்ன வேணும்..?”

“மைக் செட் வாங்கலான்னுட்டு வந்தோம். உங்க தாத்தால்லாம் ரொம்பப் பழக்கம். அதான் நம்ம கடைக்கே வந்திருக்கோம். நம்ம பையன்தான் ஆரம்பிக்கான். கொஞ்சம் பாத்துப் போட்டுக் கொடுங்க…”

“அப்படியா… ரொம்ப சந்தோஷம். அம்மா… காயத்ரி… எங்க ஊர்க்காரங்க…. பத்து பெர்சன்ட் டிஸ்கவுன்ட் வெச்சுக் கொடுத்துடு… அய்யா… சொல்லி இருக்கேன்… செக் பண்ணி வாங்கிக்கோங்க…”

அவர் செக்கிங் டேபிள் பக்கம் போக, தீர்மானமில்லாமல் தலையாட்டி விட்டு நகர்ந்தாள் காயத்ரி.

“தாத்தா… பில் என்ன பேருல போடணும்…?”

“ம்ம்…. தங்கைய்யான்னு போடும்மா… இல்ல வேண்டாம்… கருக்குவேல் அய்யனார் சவுண்ட் சர்வீஸ்னு போடு தாயி… அப்புறம் பில் போடுகதுக்கு முன்னாடி இந்தப் பணத்தக் கொஞ்சம் எண்ணிடு…”

செம்மண் ஒட்டிய மூன்று பாலிதீன் பைகளை எடுத்து மேஜை மேல் வைத்தார். உள்ளே பத்து, இருபது, ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுகள். சில்லறைகள் கூட இருந்தன.

“ரெண்டு மூணு வருஷமா காட்டுல எந்த வேலையும் நடக்கலை. இது வரைக்கும் தொழிலே அந்த நிலத்தை வெச்சுதானே நடந்தது. அதான் புதுத் தொழிலுக்குன்னு எடுத்து வைக்கற பணத்தை அந்த மண்ணுலயே சேத்துவெச்சிருந்தோம். அதான் கொஞ்சம் மண்ணாயிருக்கு… எண்ணிப் பாத்துட்டு இன்னும் எவ்வளவு தரணும்னு சொல்லும்மா…”

பாலிதீன் பைகளைப் பிரித்தாள். பணத்தை ஒட்டியிருந்த மண் துகள்களை உதறிவிட்டு எண்ணினாள்.

“பனிரெண்டாயிரத்து எண்ணூத்தி நாப்பத்தெட்டு ரூபா இருக்கு… இன்னும் ஐநூத்தி அம்பத்திரெண்டு ரூபா கொடுங்க…”

சட்டைப் பையிலிருந்து எண்ணிக் கொடுத்தார்; இரண்டு ரூபாய் சில்லறை உட்பட.

முதலாளியிடம் சென்றார்.

“ஐயா… உங்க கையால எடுத்துக் கொடுங்க…”

முதலாளி ஆம்ப்ளிஃபயரைத் தூக்கி சாமி படத்துக்கு முன்னால் வைத்து ஓரிரு நிமிடங்கள் வணங்கிவிட்டு, பெரியவரிடம் நீட்டினார்.

“மகளைக் கூட்டி வராம போனேனே…” என்று தயங்கியவர், “தாயி… கொஞ்சம் இதுல கை வெச்சுக் குடு…” என்று காயத்ரியை அழைத்தார். அட்டைப் பெட்டியில் காயத்ரி இரு கரங்களையும் வைக்க, திரும்பி வந்துவிட்டிருந்த தம் பையனை அழைத்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்.

“ரொம்ப சந்தோஷம் தம்பி… நாங்க போய்ட்டு வாரோம்… போய்ட்டு வாரோம் தாயி…”

“சரிங்க…” – வணக்கம் வைத்தார் முதலாளி.

பாவம் சார்… யார்ன்னு தெரியாதவங்களுக்குக் கூட நார்மலா ஃபிஃப்ட்டீன் பெர்சென்ட் டிஸ்கவுன்ட் கொடுக்கோம். இவரு ஒரு பழக்கத்துக்காக இங்க வந்து வாங்கறார். இன்னும் கொஞ்சம் டிஸ்கவுன்ட் கொடுத்திருக்கலாம் சார்…” – அவர்கள் நகர்ந்ததும் மெதுவான குரலில் கேட்டாள் காயத்ரி.

“இப்போதானேம்மா இவரு முதமுதல்லா வாங்குறாரு… டிஸ்கவுன்ட் பத்தில்லாம் அவருக்கு ஒண்ணும் தெரியாதும்மா… இவருகிட்டல்லாம் அடிச்சு விக்கலாம். நீ இன்னும் பிஸினஸ் ட்ரிக்லாம் நிறைய கத்துக்க வேண்டியிருக்கு… சரியா..?”

காயத்ரி தன் இருக்கைக்குத் திரும்பினாள். மேஜை ஓரத்தில் ஒதுங்கியிருந்த சிறிய மண்குவியல் கண்ணில் பட்டது. ஒரு ஸிப்பர் பேக்கைத் தேடி எடுத்தாள். அந்த மண்ணை ஒரு தூசி விடாமல் அந்தப் பையில் வாரிக்கொண்டாள்.

ப்போதாவது மண் வாசனையை நுகரத் தோன்றுகையில் இப்போதெல்லாம் அந்தப் பையைத்தான் பிரித்துப் பார்க்கிறாள். மழை நேரத்து மண் வாசத்தை விட அந்த ஸிப்பர் பேக் மண் வாசம்தான் அவளுக்கு இப்போது விருப்பமானதாகிவிட்டது. அவளுடைய மண் சேகரிப்பில் கடைசியாக இடம் பெற்றதும் அந்த ஸிப்பர் பேக்தான். •

(c) karthikaneya@gmail.com

Saturday, July 30, 2011

கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு...

2011- ம் ஆண்டுக்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் என்னுடைய 'பாலை' சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. முதல் பரிசு அசோகமித்திரன் சிறுகதைக்கு.

முடிவுகள் இந்த வார (07.08.2011) கல்கியில்.

(c) karthikaneya@gmail.com

Saturday, October 02, 2010

கல்தவளை

கைவிரல்களால் இறுகப் பற்றி
ஓடும் நீரில் சுழற்றி எறிந்தேன்.
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே
தண்ணீரில் துள்ளிச் சென்று
எதிர்க் கரையில்
ஏறி மறைந்தது
தட்டைக் கல்லில் ஒளிந்திருந்த தவளை.

(c) karthikaneya@gmail.com

காட்சிப் பிழை

சமீபத்தில் வெளியான
புதிய திரைப்படத்தில்
முதன்முறை
லைட்மேனாக இயங்கியவன்
உறவினர்களை அழைத்துக்கொண்டு
படம் பார்க்கச் சென்றான்.
எந்தத் திரையரங்கிலும் காட்டப்படவில்லை
கடைசிக் காட்சிக்குப் பிறகு
காண்பிக்கப்படும் பெயர்ப்பட்டியல்.
ஒரு திருட்டு வி.சி.டி. வாங்கி
கடைசிக் காட்சியிலிருந்து போட்டுக்காட்டினான்
அத்திரைப்படத்தை.
அவன் உறவினர் வீடுகளுக்குப்
பயணித்துக் கொண்டிருக்கிறது இப்போது
கடைசிக் காட்சியிலிருந்து துவங்கும்
அப்படத்தின் வி.சி.டி.

(c) karthikaneya@gmail.com

Monday, September 20, 2010

கலாப்ரியாவின் தாலாட்டு

புதிய ஊருக்கு இடம் மாறிச் செல்கையில்
நினைவின் தாழ்வாரங்கள் வாசித்தபடி சென்றேன்.
சொந்த ஊர் குறித்த
ஞாபக வீட்டின் கதவுகள்
திறந்துகொண்டன.
தமிழ்ச்சங்கம் தெருவான
சொக்கலிங்க முடுக்குத் தெருவில் இறங்கி
வளவுப் பிள்ளைகளோடு
தொட்டுப்பிடித்து விளையாடி
தோற்றுப் போன சடவு தீர
நினைவின் தாழ்வாரங்களில் தலை வைத்து
கனவின் தாழ்வாரங்களில் உறங்கத் தொடங்கினேன்.
மிச்ச பயணம் முழுதும்
எனைத் தாலாட்டிக் கொண்டு வந்தது
ரயிலோ கலாப்ரியாவோ
நானறியேன் புதுநகரே…

(c) karthikaneya@gmail.com

மலை என்கிற சூனியக்காரி

இயற்கையின் அன்பை
மொழிபெயர்த்துக்கொண்டிருந்த
மலையின் பாடலைக்
கேட்கப் போனேன் ஓர்நாள்.
அணைத்துக்கொள்ள தோள்களை விரித்திருந்த
மலையின் மடிகளும் கரங்களும்
எண்ணத் தொலையவில்லை.

தட்டாம் பூச்சியின் சிறகு வழி
வானம் பார்த்துக்கொண்டு போன என்னை
தாலாட்டித் தோளில் சாய்த்துக்கொண்ட மலையைக்
கட்டிக் கொள்ளப் பொங்கியது அன்பு - என்னைக்
கரைத்துக் கொண்டு.
தாய் மரத்தைக் கட்டிக் கொள்ள
ஆசைகொண்ட வேப்பம்பூவாய்
மலையின் நிழலில் நான்
மயங்கிக் கிடக்கிறேன் இப்போது.


(c) karthikaneya@gmail.com

மர மகள்

அதிகமாக வளரவேண்டுமென
ஆசை கொண்டிருந்தவள்
அடர்வனத்துள் ஓர்நாள்
வழிதவறித் தொலைந்துவிட்டாள்.
ஆகாயம் தொடும் விருட்சங்கள் கண்டு
அதிசயித்து நின்றவளை
அதன்பின் வளர்த்துவருகின்றன
அம்மரங்களே இப்போது.
அருகினிலே வருகின்றது
அம்மரங்களின் தலையினில் ஏறிநின்று
அவள் உலகினை விளிக்கும் நாள்.


(c) karthikaneya@gmail.com

'அசையாநின்ற’

புகைப்படத்துக்கு பாவனை காட்டிய
மலையுச்சி மரங்களைச் சுற்றி
அசையாநின்றமேகங்களையும்
பதிவு செய்த புகைப்படத்தில்
அசையாதே நின்ற மேகங்களில்
அக்கணத்தின்
அசைவில்லை அழகில்லை.
படம்பிடிக்காதிருந்திருந்தால்
என் நாட்களினிடையே
அலைந்தவாறிருந்திருக்கும்
அம்மேகக் கூட்டம் என
ஏங்கத் தொடங்கியபோது
அறை முழுதும்
தூறல் போடத் தொடங்கியிருந்தது
புகைப்படத்தினின்று
பைய வெளியேறியிருந்த மேகம்.

(c) karthikaneya@gmail.com

Monday, August 16, 2010

இவளுக்கு இவள் என்றும் பேர்

கொஞ்சும் நேரங்களில்

குட்டிப் பாப்பா

சுட்டிப் பாப்பா

புஜ்ஜிக்குட்டி

அம்முக்குட்டி

செல்லப் பாப்பா

வெல்லக்கட்டி

பட்டுக்குட்டி

சிட்டுக்குருவி

ரெட்டைவால் குருவி;

கோபப்படும் நேரங்களில்

குட்டிச் சாத்தான்

பாம்புக்குட்டி

லூசு

பிசாசு

குட்டிப்பிசாசு

குரங்கு…

இவளே சமயங்களில் அழைக்கப்படுவாள்

‘இவளே’ என்றும்.

(c) karthikaneya@gmail.com

பேசாத முத்தம்

எப்போதும் வாய்விட்டுப் பேசிடாத

உன் நேயத்தைப் போல்

உவப்பளிக்கும் ஒரு முத்தமிடு – நான்

உறங்கிக் கொண்டிருக்கையில்.

ரகசியத்தில் ஒளித்து வை - அந்த

முத்தத்தின் சுவையை

எப்போதும்.


(c) karthikaneya@gmail.com

முப்பரிமாணத் திருட்டு

போர்க்கள ஓவியச் சுவர்களின் மேற்கூரைகளில்

புறாக்கள் இளைப்பாற

அருங்காட்சியகமாகிவிட்ட தம் கோட்டையை

நாலாபுறங்களிலும் காவல்செய்கிறார்

முப்பரிமாண ஓவியத் திப்பு.

எப்படியோ அவர் பார்வைக்குத் தப்பி

தேற்றி வந்துவிட்டேன் ஒரு வெண்புறா இறகை…


(c) karthikaneya@gmail.com

Saturday, July 17, 2010

நட்சத்திரக் கதைசொல்லி

அனுபவங்கள் எல்லாம்
ஆகாயத்தில் மின்னுவதாக
அறியாமல் சொல்லிவிட்டான் ஒருநாள் - என்
நச்சரிப்பு தாளாமல் பின்
நாளொரு கதை சொல்லத் தொடங்கினான்
நட்சத்திரக் கதைசொல்லி.
அதில் யாதொரு கதையும்
இடம்பெறவில்லையாம் இன்னும்
ஆகாய விண்மீன் கூட்டத்தில்.

(c) karthikaneya@gmail.com

விஷ முத்தம்

பேசத் துணியாத
பதங்களெல்லாம்
படிந்து தேங்கியுள்ளன
இதழ்களிலேயே.
உனைக் கொல்லும் விஷமாக
இனிக்கக்கூடும்
முதல் முத்தம்.

(c) karthikaneya@gmail.com

நெடுஞ்சாலை

எழுத மறந்த கவிதைகளை
இளங்காலைச் சாலைகளில்
இதமாய்த் தூவுகின்றன மரங்கள்.
நடை மறந்த வாழ்க்கையில்
பாசாங்கு செய்கிறேன்
படிக்க நேரம் இல்லாததாக.

(c) karthikaneya@gmail.com

இரை

குருணை அரிசியும்
கொறிக்க பாப்கார்னும்
குளிர்நீரும் வைத்தாலும்
பறந்து திரிந்து இரை தேடாமல்
பால்கனியில் எட்டிப்பார்ப்பதில்லை
இந்தச் சிட்டுக்குருவிகள் ஒருநாளும்.

(c) karthikaneya@gmail.com

மழையும் மழை சார்ந்த...

புதிய சொற்களைத் தாகித்து
உயிர்விட்டுக் கொண்டிருந்தது
ஒரு கவிதை.
அதற்காகத்தான் தேடிக்கொண்டிருந்தேன்,
'அன்றலர்ந்த...' என்பது போல்
அழுகிய சொற்களை வீசிவிட்டு
புத்தம் சொற்களை.

பழகிய பாடுபொருள்களைப் பழித்துவிட்டு
புதியவை எழுதிப் பார்க்க வேண்டும்.

யார் பழித்தால் என்ன,
எல்லார்க்கும் பொழியும் மழை
தந்துவிடக் கூடும்;
கவிதையை உயிர்ப்பிக்கும் சொற்களை.

இளமழை வந்தேவிட்டது
எதிர்பார்த்திருந்த வேளையில்.
சொற்கள் குறித்து மெதுவாகத் தொடங்குகையில்,
அதற்கென்ன தாகமோ தெரியவில்லை;
அள்ளிக் குடித்துச் சென்றே சென்று விட்டது
அந்தக் கவிதையை.

ஊர் ஊராகக் கொட்டித் தீர்க்கிறது
மழை இப்போது,
இன்னும் எழுதாத என் கவிதையை.

(c) karthikaneya@gmail.com

Monday, May 24, 2010

நதி நிலவு

சூல் வளைகளைச்
சுமந்தோடும் நதியலை மேல்
தன் கடைசி முத்திரையைப் பதிக்கிறது
சுடலையில் ஆடும் தழலின் பிம்பம்.
பார்த்துக் கொண்டிருந்த பௌர்ணமி நிலவு
நெருப்போடு நிற்பதும்
வளையோடு நடப்பதும்தான்
பிரபஞ்ச ரகசியம்.

(c) karthikaneya@gmail.com

தனிச்சுற்றுக்கு மட்டும்...

கதவு திறந்த நண்பர்
கைகளை விரித்து,
'ஆ ஆ ஆ' என வரவேற்றார்.
புன்சிரித்த அவர் மனைவி,
'வுச்சு' என்றார்
இருக்கையைக் காட்டி.
இயல்பாகச் செய்வது போல்
நீவிக் கொண்டேன் காது மடல்களை.
தத்து பித்தென்று நடந்து வந்த
அவர்கள் மகன்
'புத்து புத்து' என்றான்.
புரியவே இல்லை எனக்கு - அவன்
புத்தகத்தில் என் கால் பட்டிருந்தது.
வேற்றுமொழிப் படம் பார்ப்பது போல்
வெறுமையான சில எதிர்வினைகளின் பின்,
தலைவாழை இலை போட்டு அழைத்தார்கள்,
'தச்சு மம்மு பப்பு மம்மு சாப்பிடலாம்.'
இயற்பியல் விதிகளின் புண்ணியத்தில்
எப்படியோ சாப்பிட்டு முடித்தபின்,
என் முதுகை நீவிய சிறுவன்
'புஜ்ஜு புஜ்ஜு' என்றான் என் அம்மாவின் குரலில்.
தலைசுற்றிக் கொண்டு மயங்கத் தொடங்குகையில்
தலையணை தந்து,
'கண்ணை மூடி லோலிலோ' என்றனர் மூவரும்.
புதிய தலைமுறைகளுக்கான
சொற்களை உருவாக்கும்
சிந்தனையாளன் உலவும்
அவ்வீட்டில் நுழைந்து
சுயநினைவோடு திரும்ப உதவக்கூடும்
அவர்களின் குடும்ப நிகண்டு.
பயிற்சி தர இருக்கவே இருக்கிறார்
நூலாசிரியர் வாண்டு.

(c) karthikaneya@gmail.com

அலைத்துளி

"இருள் கீறி விடியல் தொட
எத்தனிக்கையில்
கடல் பிரளயம் போல்
தோற்றுகிறது பூமி.
பழுதின்றி வந்து விடுகிறாய்
நீ மட்டும்
பருவத்தில் வர்ஷிக்கும் மழைத் துளி போல்" -
சூரியன் சுட்டதும் சொன்னது
நீலம் திறந்து வெளிவந்த நிலவு:
"கடலும் மழையும்
ஒன்றென நீ அறியாயா?"

(c) karthikaneya@gmail.com

மிச்சமிருக்கிறது சூரியன்

அணில் கொறித்துக் கொண்டிருந்தது
வெயிலை
மரம் பார்த்துக் கொண்டிருந்தது.

(c) karthikaneya@gmail.com

Tuesday, May 04, 2010

அந்நிய நிழல்

மேஜை விளக்கின்
மென் நிலவொளியில்
பைத்தியமாயிருக்க சில குறிப்புகளை
வாசித்துக் கொண்டிருந்தேன்
ஒரு முன்னிரவில்.

ஓரிரு குறிப்புகள்
ஒத்திருந்தன என்னோடு.

மின்சாரம் மெதுவாக
விடைபெற்றுச் சென்றபின்
மெழுகுவர்த்தி ஒளியில்
வாசித்து முடித்தேன்
மேலும் சில குறிப்புகள்.

சுவடின்றி அறைமுழுதும்
சூழ்ந்துவிட்ட நிலவொளி போல்
பயம் நுழைந்தது
மிக மெல்ல மனதில்.

வெறிகொண்டாற்போல்
துணிகளைக் கலைத்துப் போட்டு
மடித்து வைத்தேன்.

வெட்கம் கெட்டு
கொஞ்ச நேரம்
அழுது தீர்த்தேன்.

தயக்கம் துறந்து - நாம்
பகிர்ந்து கொண்ட தருணத்தை
நினைவடுக்கில் மெதுவாகப்
புரட்ட முயன்றேன்.
நம் ஆயுளின் வெட்கமெல்லாம்
குறுக்கிட்டு நின்றது அங்கே.

ஒரு பகிர்தல் நம்மை
அந்நியமாக்கிவிட்டது
வினோதம்தான்

திரைச்சீலை மெதுவாக
உயர்ந்து தாழ்கிறது
சுவரில் என் சாயை
படிந்து எழுந்து படிகிறது

நிழலுக்கும் தனியே
ஓர் உயிர் உண்டு என்று
நம்பியிருக்கவில்லை
நான் இதுவரை.

இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்
ஒரு பைத்தியத்தின் குறிப்புகளை...

(C) karthikaneya@gmail.com

Monday, April 26, 2010

தற்செயல் தவறுகள்

தற்செயலான ஒரு மழைத் திவலை போல்
பரிசுத்தமான
புன்னகையை,
நேயத்தை,
ஏக்கத்தை,
கண்ணீர்த் துளியை,
பிறப்பை,
இறப்பை,
பிரிவை,
முத்தத்தை,
கோபத்தை,
தியாகத்தை,
துரோகத்தை,
மன்னிப்பை…
மலர்த்திவைக்கும் ஆணையுடன்தான் துவங்கின
பிரபஞ்ச இயக்கங்கள் யாவுமே.

ஒரு எதிர்பார்ப்பில்
ஒரு காத்திருப்பில்
ஒரு அலட்சியத்தில்
ஒரு நிராகரிப்பில்
ஒரு புறக்கணிப்பில்
ஒரு போலச்செய்தலில்
புனிதத் தன்மையை இழந்துவிடுகின்றன யாவுமே…

முன்னரே உணர்ந்திருந்தால்
தவற விட்டிருப்பாயா…
உன் சொற்கள்
என்னை மகிழ்த்தியிருக்கக்கூடும்
ஒரு தருணத்தை..?

(C) karthikaneya@gmail.com

தொழில்நுட்பம்

தொழில்நுட்பப் பூங்காக்களின்
கண்ணாடிக் கட்டிடச் சுவர்களை
கயிற்றில் தொங்கிச் சுத்தம் செய்பவன்,
ஓவர்டைமில்
முகம்திருத்தி அனுப்பி வைக்கிறான்
வீடுதிரும்பும் சூரியனை.

(C) karthikaneya@gmail.com

ரகசிய வாசல்கள்

யாராரோ அறியக் கிடைத்தபின்னும்,
நான் நம்புதற்கில்லை
உன் ரகசியங்கள் ஏதும்
என்னிடத்தில் இருப்பதாய்.

தடயங்களை அழிப்பது வீண் வேலை.
உன் ரகசியத்தின் வாசல்கள்
பலவீனமானவை
எப்போதும் திறந்திருப்பவை.
அவற்றை என்னால்
காவல் செய்ய இயலாது.

அன்பு ஒன்றைத் தவிர
யாதொரு பயனுமில்லை
என் சொல்லிலும் செயலிலும்.

உள்ளே என்னை அனுமதிக்காதிருக்க
யோசிக்க சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன.
உன் உலகத்தில் எனக்கோர் இடம்
உனக்கெப்போதும் ஆபத்துதான்!

(C) karthikaneya@gmail.com

Friday, February 05, 2010

பொன்மாலைப்பொழுது...

சில வண்ணத்துப்பூச்சிகள் அமர்ந்திருக்கின்றன.
சில வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்கின்றன.
ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று
தாழப் பறக்கிறது.
அரைவெள்ளை வண்ணத்துப்பூச்சி
மேலெழும்பி வருகிறது.
இளமஞ்சள் சிறகுகள்
காற்றில் நிறைகின்றன.
உலகமே வண்ணத்துப்பூச்சி மயமாகிவிட்டது
சில வண்ணத்துப்பூச்சிகள்
ஓடித் திரிகிற பூங்காவில்.

(C) karthikaneya@gmail.com

Thursday, February 04, 2010

நீயும் நீயும்...

நீ என்பதும் நீதான் என்று
உணர்ந்துகொண்ட பொழுதில்
பகிர்ந்துகொள்ள என்னிடம் இல்லை
பிறந்த குழந்தையின்
மனப்பதிவுகள் கூட.

இப்போது இது என் புத்துலகம்.

பால்யத்தைப் பிரக்ஞையோடு அனுபவிப்பதான
இந்தக் காலங்களில்
காயங்கள் இல்லை
வலிகள் இல்லை -
கண்டுகொண்டேன் இப்போது
நீதான் நீ என்று.

(C) karthikaneya@gmail.com

Saturday, January 30, 2010

அதுவும்...

நீயும் சிந்து
ஒரு கண்ணீர்த் துளியோ
சிறு புன்னகையோ...
அகவெளிப்பாட்டின்
மெய் சாட்சியாக
என் அழுகையினூடே
அப்போது
அங்கே
அது இருக்கட்டும்
அதுவும் இருக்கட்டும்...

(C) karthikaneya@gmail.com

Tuesday, January 05, 2010

நத்தையின் சலனம்

நத்தையின் சலனம் போல்
நகர்ந்திருக்கக்கூடும்
தொட்டாசுருங்கி இலைகள்
விரிவது போல்
விடிந்திருக்கக்கூடும்
அவ்விரவு.
நொடி முள்ளின் ஒரு நகர்வில்
கடந்ததாகத் தோன்றிய
நான் தூங்கியதாக
நினைவடுக்கில் பதிந்திராத
அந்த இரவில்
மீண்டுமொரு முறை தூங்கி
தேடவேண்டும் - அந்த
தொலைந்த இரவின் கனவுகளை.

(C) karthikaneya@gmail.com

Monday, December 21, 2009

மரபுவழிக் கதைகள்

தீர்த்தக்கரைகளோடு
பேசிச் செல்லும்
தீராத கதைகளைக்
கடலில் சேர்க்கின்றன நதிகள்.
ஆதிநாள் முதல்
அவற்றைத்தான் ஓயாமல்
அலைகள் சொல்கின்றன
கரைகளுக்கு.
அதன்பிறகுதான்
குவியத் தொடங்கின
மணல்வெளியெங்கும்
மரபுவழிக் கதைகள் .
(C) karthikaneya@gmail.com

Thursday, December 10, 2009

மெய்ம்மையின் சங்கேதம்

மறுக்கப்படும் பகிர்தல்
மறதியின் மீதொளிரும் வண்ணப்பூச்சு
துயருறுவதாகக் காட்டும் பழம்மரபு
ஏளனப்புன்னகையின் முகமூடி
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்
சமாதான உடன்படிக்கை
போர் தொடுக்கும் முன்னான முரசறைதல்
தன்முனைப்பற்ற சரணடைதல்
குரூர தண்டனையின் ஒப்பனை முகம்...
யாதொன்றின் சங்கேதமாகவும்
சில பொழுதுகளில் வெளிப்படும் -
'மன்னித்து விடு'

(C) karthikaneya@gmail.com