Friday, June 27, 2008

தரப்படும் <=> அன்பு <=> பெறப்படும்

கூறப்பட்ட நன்றிகள்
திருப்பித் தரப்படும்.
அளிக்கப்பட்ட விட்டுத்தரல்கள்
அங்கீகரிக்கப்படும்.
கோரப்பட்ட மன்னிப்புகள்
ஏற்றுக்கொள்ளப்படும்.
அளிக்கப்பட்ட மன்னிப்புகள்
மதிக்கப்படும்.
காயப்பட்ட மனங்கள்
நேசிக்கப்படும்.
சிந்தப்பட்ட கண்ணீர்த் துளிகள்
புரிந்துகொள்ளப்படும்.

Tuesday, June 24, 2008

மழை நாளில் உலா வந்த காற்று

மழை இரயிலேறிச் சென்றபின்
உலர்ந்து கொண்டிருந்தது
கல் இருக்கைகளில்
உலாத்தியவாறு காற்று.

மீண்டும் வரும் கோடை

கோடைகால இரயில்கள் எல்லாம்
குழந்தைகள் சிறப்பு இரயில்களாய்த் தோன்றும்.
விடுமுறை முடிந்தபின் இரயில்கள்
வெறிச்சோடிப் போய்விடுகின்றன
கல்லூரி மாணவர்களின்
கலகலப்பு மிச்சமிருந்தும்.

முன்னறிவிப்பின்றி

இருப்புப் பாதையின்
நடுவே கிடந்தது
உணவுப் பொட்டலம்.
முன்னறிவிப்பின்றி வந்தது
எறும்பு ரயில் வண்டி ஒன்று.

எப்போது ரயில் வரும்?

இருப்புப் பாதையோரம்
எப்போதேனும்
நிழல் காணும் பூக்கள்.

Saturday, June 14, 2008

உயிர்களிடத்து அன்பு

சிறகு முறிந்த பட்டாம்பூச்சி ஒன்று
வெயில் தகிக்கும் சாலையில் உயிர் விடுவதை
விரையும் வாகனங்களுக்குப் பயந்து
வீதியோரம் நின்று மௌன சாட்சியாக
நான் பார்த்த அன்று
கனவில் வந்து விட்டுப் போனார்
முறுக்கிய மீசையோடு சிரித்தவாறு பாரதி.

நீயும் வா நிலா

நின்றதெல்லாம் நின்றபடி இருக்க
இந்த நிலா மட்டும்
என்கூட வரும் எனில்
இன்னும் நீள வேண்டும்
இந்த இரயில் பயணமும்
எனது இரவும்.

ஒரு துளியின் பல மழைகள்

தங்க அரளி இதழ்களில்
தங்கி நிற்கும் ஒரு துளி
நினைவூட்டி விடுகிறது
தவற விட்ட எல்லா மழையையும்.

Friday, June 13, 2008

"விரைவுப் பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கிறது
ஒரு பட்டாம்பூச்சி
படபடப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்."
விஜய் @ vettivambu said, "ஆஹா நெல்லைச்சீமையிலிருந்து ஒரு வலைப்பதிவாளரா? மிக்க மகிழ்ச்சி. இதென்ன ஹை-கூ கவிதை ரகமா?".
இந்த கவிதை ஹைக்கூ அல்ல. ஒரு அனுபவத்தை நமக்குத் தந்த நிகழ்வை மட்டும் வெளிப்படுத்துவது தான் ஹைக்கூ. "வாசகனின் மனமாகிய குளத்தில் கல்லை எறியும் ஒரு கவிஞனின் முயற்சி ஹைக்கூ. கல்லை எறிவது தான் கவிஞனின் வேலை. அதன் பின் எழும் அலைகளையும் அவனே வரைந்து கொண்டிருக்கக் கூடாது. அதை வாசகனின் சுதந்திரத்துக்கு விட்டு விட வேண்டும் ". இதுவே ஹைக்கூவின் அடிப்படைப் பண்பு. மற்றபடி மூன்று அடிகளில் இருக்க வேண்டும். ஐந்து, ஏழு, ஐந்து அசைகளில் அமைக்க வேண்டும் என்பது போன்ற கட்டாயங்கள் கூட நவீன ஹைக்கூவில் தளர்த்தப் பட்டுவிட்டன. எனவே இந்த "முன் செல்லும் இதயம்" கவிதையை இப்படி ஹைக்கூவாக மாற்றலாம்.

பயணம்
விரைவுப் பேருந்தின் முன்
பறந்து கொண்டிருக்கின்றது
பட்டாம்பூச்சி.

இது ஹைக்கூவாக இருக்கலாம் என்று நம்புகிறேன் . தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Monday, June 09, 2008

முன் செல்லும் இதயம்

விரைவுப்பேருந்தின் முன்னே
பறந்து கொண்டிருக்கின்றது
ஒரு பட்டாம்பூச்சி.
பட படப்பது அதன் சிறகுகளா?
என் இதயமும்தான்.

Wednesday, June 04, 2008

இதற்கும் வேண்டுமா தலைப்பு?

உன்னுடைய குழந்தைக்குப் பெயர் வைப்பதெல்லாம்
ஊரார் அழைக்கத் தான்.
உன்னுடைய குழந்தை உனக்கெப்போதும்
உன்னுடைய குழந்தைதானே.
என்னுடைய கவிதைக்கும் பெயர் வேண்டுமென்றால
ஏதேனும் இட்டுக் கொள்.
என்னுடைய கவிதை எனக்கெப்போதும்
என்னுடைய கவிதையே தான்.

சுவரொட்டிகளை ஒட்ட சில சுவர்கள்

சில வாரங்களுக்கு முன்பு நெல்லை மாநகராட்சியில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாபார நிறுவனங்களின் வாசல்கள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டன. சாலை விபத்துகள் நிகழ்வதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் நகரெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் எல்லா விதமான திரைப்படச் சுவரொட்டிகளைப் பற்றி கேட்பாரில்லை. விளம்பரப் பலகைகளை விடவும் அதிகம் கண்ணையும் கருத்தையும் கவர்பவை திரைப்படச் சுவரொட்டிகள் என்பதே எனது எண்ணம். தமிழ் நாட்டில் சில மாநகராட்சிகளில் பொது இடங்களில் ஆபாசச் சுவரொட்டிகள் ஒட்டப் படுவதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ள நிலையில் இங்குள்ள நிலைமையையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எத்தகைய திரைப்படச் சுவரொட்டிகளும் பொது இடங்களிலும், பள்ளிகளின் அருகிலும், அரசு அலுவலகங்களின் அருகிலும் கூட ஒட்டப்பட்டுள்ளன. இவற்றால் சாலை விபத்துகளுக்கு மட்டுமல்ல மன விபத்துகளுக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. மக்களின் உயிரையும், உடல் நலத்தையும் காப்பது போல அவர்களின் மன ஆரோக்கியமும் பாதுகாக்கப்பட வேண்டாமா? இது போன்ற சுவரொட்டிகள் பொது இடங்களில் ஒட்டப் படுவதை நமது மாநகராட்சியிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் செய்திப் பலகை அமைத்திருப்பது போல செய்தி, விளம்பரச் சுவரொட்டிகளுக்கு என்று குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி அதற்கு என கட்டணமும் பெற்றால் நகரும் தூய்மை ஆகும். விதிகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்தால் இரு வகையிலும் மாநகராட்சி மேற்கொள்ளும் பணிகளுக்கு கூடுதல் வருவாய் கிட்டும். பல்வேறு விஷயங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ளும் நெல்லை மாநகராட்சி இதையும் கவனித்தால் நமது நெல்லை வெள்ளையாக மாறிவிடுமே விரைவில்?